கள்ளக்குறிச்சி சம்பவத்தில் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: திமுக எம்எல்ஏக்கள்


சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என திமுக எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற உயிரிழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாற்றம் செய்து, ஆயத்துறை இயக்குநர்கள் மாற்றப்பட்டு, குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அதிமுக ஆட்சியிலும், பாஜக ஆட்சியிலும் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புகள் பற்றி வாய்திறக்காத பாமக நிறுவனர் ராமதாஸ், 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுத்த முதல்வரின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நாங்கள் பொது வாழ்வில் இருந்து விலகத்தயாராக இருக்கிறோம். அதேபோல ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இருவரும் எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் அவர்கள் அரசியலில் இருந்து விலகத் தயாரா?

பொய்யான குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவோம்.

அதேபோல், கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நாங்களும் அந்த மருத்துவமனையில் தான் இருந்தோம். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழக்கவில்லை. அந்த சமயத்தில் உயிரிழந்த 3 பேரும் அவரவர்இல்லங்களில்தான் இறந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கே வரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்

x