கள்ளக்குறிச்சி / சென்னை: மரக்காணம் உயிரிழப்பில் மெத்தனால் விநியோகத்தில் சிக்கியவரே, கள்ளக்குறிச்சியிலும் சாராயவியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் 50-க்கும் மேற்பட்டோரின் உயிரிழப்புக்கு காரணமாக கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜின் தம்பிதாமோதரன், அவரது மனைவி சந்திரா, சின்னதுரை,மாதேஷ், ஜோசப் உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
ஆந்திராவில் வாங்கி புதுச்சேரி வழியாக... சின்னதுரையிடம் நடத்திய விசாரணையில், மாதேஷ், ஜோசப் ஆகியோரிடமிருந்து மெத்தனால் பெற்றதாகத் தெரிவித்தார். அவர்களிடம் விசாரித்தபோது, ஆந்திரா மற்றும் சென்னையில் இருந்து மெத்தனாலை வாங்கி, புதுச்சேரி வழியாக கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.
தொடர் விசாரணையில், மதன்குமார் என்ற தரகர்மூலம் மெத்தனாலை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து மதன்குமாரைப் பிடித்து விசாரித்தோம். ஆந்திராவில் மூடப்பட்ட தொழிற்சாலையில் இருந்துமெத்தனாலை வாங்கி வந்ததாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து விசாரிக்க காவல் துறையினர் ஆந்திரா சென்றுள்ளனர். ஆந்திராவில் மதன்குமாருக்கு தரகராக செயல்பட்ட ஒருவரும் பிடிபட்டிருக்கிறார். அவரிடம் விசாரணை நடந்துள்ளது.
சிபிசிஐடி வசம் சிக்கியுள்ள மதன்குமார், கடந்த ஆண்டு மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் விஷச் சாராயம் குடித்து 12 பேர் இறந்தவழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். அண்மையில்தான் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். மீண்டும் அவர் மெத்தனால் விற்றுள்ளார். இம்முறை சென்னையில் மெத்தனால் வாங்காமல், ஆந்திராவில் உள்ள புரோக்கர் மூலம் வாங்கி வந்து விற்றுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
அவரை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து இருந்தால், கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சிபிசிஐடி விசாரணை: இதற்கிடையில், சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து மெத்தனால் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மெத்தனால் ‘தின்னர்’ என்ற பெயரில்,ஜிஎஸ்டி வரி இல்லாமல், போலி பில் தயாரித்து வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சின்னதுரை மெத்தனாலை வாங்கி, அதில் தண்ணீரை மட்டும் கலந்து, கள்ளச் சாராயம் என விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மெத்தனாலை விற்பனை செய்த மாதவரம் ஆலையின் உரிமையாளர் யார், எவ்வாறு அங்கிருந்து மெத்தனால் விற்பனை செய்யப்பட்டது, யார் மூலமாக கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பாகவும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.