கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும், உயிரிழந்தோர் குடும்பத்தினரையும் தேசிய பட்டியலின ஆணைய இயக்குநர் எஸ்.ரவிவர்மன் நேற்று சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து, என்னென்ன உதவிகள் தேவை என்பதைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள இங்கு வந்துள்ளோம். உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. மேலும்,சிறப்பு மருத்துவர்களை நியமித்து,பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்கப்படுகிறது.
கள்ளச் சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தவர். பாதிப்பை ஏற்படுத்தியவர் பட்டியலினத்தைச் சேராதவர் என்பதால், இந்த வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைப்போம். அதேபோல, கள்ளச்சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். எங்களது விசாரணை அறிக்கையை, ஆணையத்தின் தலைவர் மற்றும் மத்திய அரசிடம் 2 தினங்களுக்குள் சமர்ப்பிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஏடிஎஸ்பி பணியிடங்கள்... கள்ளச் சாராய விற்பனை தடுப்பு உள்ளிட்டவைகளுக்காக மாவட்ட அளவில் மதுவிலக்கு ஏடிஎஸ்பி, மாநகராட்சிகளில் துணை ஆணையர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.2019-ல் இவை ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, "மதுவிலக்கு ஏடிஎஸ்பி பணியிடம் ரத்து செய்யப்பட்டு, பெண்கள், குழந்தைகளுக்குஎதிரான குற்றத் தடுப்புப் பிரிவில்ஏடிஎஸ்பி-க்கள் பணியாற்றுகின்றனர். இதனால், கள்ளச் சாராய விற்பனையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. எனவே, கள்ளச் சாராய புகார்கள் அதிகம் வரும் மாவட்டங்களில் மதுவிலக்குப் பிரிவு ஏடிஎஸ்பி-க்களை நியமிக்க அரசு உத்தரவிட வேண்டும்" என்றனர்.