பாஜகவை நேசிக்கின்றனர் முஸ்லிம்கள்: சொல்கிறார் உபி அமைச்சர் தானீஷ் அன்சாரி


"பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை உத்தர பிரதேசத்தின் முஸ்லிம்கள் நேசிக்கத் துவங்கி உள்ளனர்" என இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் தானீஷ் ஆஸாத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

உபியில் சுமார் 28 சதவீதம் உள்ள சன்னி பிரிவு முஸ்லிம்கள், பாஜகவை விரும்பாதவர்கள் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, பாஜகவும் முஸ்லிம்களை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமல், தவிர்ப்பது உண்டு. இதற்கு தனது இந்துத்துவா கொள்கையினால், 2014 முதல் பாஜக அரசியல் செய்வதும் காரணமாகக் கருதப்படுகிறது. உபியின் அமைச்சரவையில் முஸ்லிம்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டியதாக உள்ளது. இங்கு இரண்டு பிரிவுகளாக ஷியா மற்றும் சன்னியின் வஃக்பு வாரியத் சொத்துகள், மதரஸாக்கள் அதிகம் உள்ளன. இவற்றை நிர்வாகிக்க, முகலாயர் ஆட்சி முதல் முஸ்லிம்களிடமே ஒப்படைக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுபான்மைத்துறை அமைச்சராக மோசின் ராசா நியமிக்கப்பட்டிருந்தார். இந்தமுறை அவருக்குப் பதிலாக பாஜகவின் மற்றொரு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த தானீஷ் ஆஸாத் அன்சாரி அமைச்சராகி உள்ளார்.

இது குறித்து அமைச்சர் தானீஷ் அன்சாரி கூறும்போது, "உபியின் முஸ்லிம்கள், பிரதமர் மோடி, முதல்வர் யோகியுடன் பாஜகவை நேசிக்கத் துவங்கி உள்ளனர். இவர்கள் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜுக்கு மட்டுமே ஆதரவளிப்பதாகக் கருதுவது தவறு. இந்த தேர்தலில் 10 சதவீத முஸ்லிம்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர். நான் மீதமுள்ள முஸ்லிம்களையும் பாஜகவிற்கு அழைத்து வருவேன்" எனத் தெரிவித்தார்.

கடந்த 2017-ல் நடந்த உபியின் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அதே நேரத்தில் மேல்சபை உறுப்பினராக்கப்பட்ட இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த மோசின் ராசா அமைச்சராக்கப்பட்டார். 2019, மக்களவை தேர்தலிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர். 2022 சட்டப்பேரவையிலும் முஸ்லிம்களுக்கு பாஜகவில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (சோனுலால்) சார்பில் ராம்பூரில் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த ஹைதர் அலிகானுக்கு வாய்ப்பளித்தது. முஸ்லிம்கள் அதிகமாக இருந்தும் அவர் தோல்வியடைந்தார். கடந்த 2017-ல் மேல்சபை உறுப்பிரனாகி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோசின் ராசா மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால் பாஜக அவரை ஒதுக்கி வைத்தது. அவருக்கு பதிலாக சிறுபான்மை அமைச்சராக அன்சாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர் மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தானீஷ் அன்சாரி பாஜகவிற்கு புதியவர் அல்ல. லக்னோ பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவராக இருந்த அன்சாரி, அதன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத்திலும் இணைந்திருந்தார். தனது பட்டமேற்படிப்பை முடித்தவர், பாஜகவின் மாநில சிறுபான்மை பிரிவின் பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. இந்தமுறை 2022 சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம்களிடம் தானீஷின் பிரச்சாரம் பாஜகவின் நம்பிக்கையை வென்றது.

உபி முதல்வர் யோகிக்கும் நெருக்கமானவரான தானீஷ், உபியின் முக்கிய அறக்கட்டளையான பக்ருத்தீன் அலி அகமது கமிட்டியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டிருந்தார். உபி மாநில மொழிகள் குழுவிலும் தானீஷ் உறுப்பினர். உபியில் முக்கிய முஸ்லிமாக பல ஆண்டுகளாக இருப்பவர் மத்திய அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வீ. இவரும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். நீண்ட காலத்திற்கு பின் பாஜகவில் ஒரு சன்னி முஸ்லிமான தானீஷ் அன்சாரிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

x