கடலூர்: கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பை கண்டித்து கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் முயன்ற பாஜகவினரை தடுத்து போலீஸார் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறி கைது செய்ய போது போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளு,முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் 153 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் விஷச்சாராயம் உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து இன்று பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன் படி இன்று (ஜூன்.22) கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்து வதற்கு பாஜக கடலூர் மாவட்டத் தலைவர்கள் மணிகண்டன், மருதை தலைமையில் சிறப்பு அழைப்பாளர்கள் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜீவா, வினோத்குமார், அக்னி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஜெனித் மேகநாதன், ரங்கராஜ், கோபிநாத் கணேசன், முன்னாள் எம்எல்ஏக்கள் அருள், ராகேந்திரன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமனோர் திரண்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜகவினரை எச்சரித்தனர். ஆனால் பாஜகவினர் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை கைது செய்ய முயன்ற போது பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளு,முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீஸார் சிலரை குண்டுகட்டாக தூக்கி காவல் வேனில் ஏற்றினர்.
அப்போது பாஜகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் போலீஸாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனையொடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் போலீசஸார் கைது செய்தனர். இந்த போராட்டத்தை ஒட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.