தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் காற்றில் மின்கம்பம் முறிந்து விழுந்த விபத்தில் தனியார் வங்கி காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீவைகுண்டம் பெரும்பத்து பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (51). இவர் அங்குள்ள தனியார் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை வீட்டில் இருந்து சைக்கிளில் பஜார் பகுதிக்கு புறப்பட்டார். அப்போது திடீரென காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. இதில், பெரும்பத்து தெருவில் இருந்த ஒரு தென்னைமரம் முறிந்து அந்த வழியாக சென்ற மின்வயர் மீது விழுந்தது. இதனால் அங்கிருந்த மின்வயர்களுடன் கூடிய 3 காங்கிரீட் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
இதில், ஒரு மின்வயர் சைக்கிளில் வந்த சங்கரலிங்கத்தின் மீது விழுந்தது. அப்போது மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கரலிங்கத்தின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சங்கரலிங்கத்துக்கு சுடலைவடிவு என்ற மனைவியும், பொன்வேணி என்ற மகளும் உள்ளனர். இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அங்கு வந்த சங்கரலிங்கத்தின் உறவினர்கள் மற்றும் அதிமுக, பாஜக, அமமுகவினர், தரமற்ற மின்பங்கள் தான் சங்கலிங்கத்தின் உயிரிழப்பு காரணம் என குற்றம்சாட்டி மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சங்கரலிங்கத்தின் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தற்போது, 12-ம் வகுப்பு முடித்து முதலாம் ஆண்டு கல்லூரியில் இணைந்துள்ள அவரது மகள் பொன்வேணியின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் பெரும்பத்து தெருவில் காற்றின் வேகத்தில் தென்னை முறிந்து விழுந்தததில், அங்கிருந்த மின் கம்பம் சாய்ந்து கிடக்கிறது.