மதிமுகவில் சுழலும் வாரிசு அரசியல் சண்டை !


வைகோ தன் மகன் துரை வைகோவுடன்...

வாழ்க்கை ஒரு வட்டம் என்ற வாதத்துக்கு மிகச் சரியான உதாரணமாகியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. “திமுகவில் குடும்ப அரசியல், வாரிசு அரசியல், பட்டத்து இளவரசருக்கு (ஸ்டாலின்) மகுடம் சூட்டப் பார்க்கிறார், மகன் ஸ்டாலினுக்காக என்னை அழிக்கப் பார்க்கிறார்” என்று கருணாநிதியைப் பார்த்து வைகோ என்னெவெல்லாம் பேசினாரோ, இன்று அத்தனை விமர்சனங்களையும் வைகோவும் ஒருசேர எதிர்கொண்டு வருகிறார்.

வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட மதிமுகவில் வாரிசு அரசியல் தலைத் தூக்கியிருப்பதாக அக்கட்சியில் கலகக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இன்னொரு புறம் , தாய்க் கழகமான திமுகவிலேயே கட்சியை கரைத்துவிட வேண்டும் என்றும் அதிருப்தியாளர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கட்சியில் மகனை முன்னிறுத்தத் தொடங்கியிருக்கும் வைகோவின் முடிவு சரியா?

1993-ம் ஆண்டில் திமுகவிலிருந்து வைகோ விலக்கப்பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், வைகோவால் பூதாகரமாகப் பேசப்பட்டது வாரிசு அரசியல்தான். திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோவுக்காக உயிர்த் தியாகம் செய்த இடிமலை உதயன் உள்ளிட்ட ஐந்து தொண்டர்களின் சாம்பலிலிருந்து உருவானதுதான் மதிமுக என்று துண்டை இறுக்கி, நாடி, நரம்புகள் புடைக்க, உச்சஸ்தாயில் பேசியவர்தான் வைகோ. மதிமுக தொடங்கி 30-ம் ஆண்டை எட்ட உள்ள நிலையில் பழைய காட்சிகள் கட்சியில் தலைகீழாக ஓடத் தொடங்கியிருக்கின்றன.

“என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்” என்று கடந்த காலங்களில் முழங்கியவர் வைகோ. ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை தீவிர அரசியல் செய்துவந்த வைகோவால் முன்பு போல செயல்பட முடியவில்லை. பொதுக்கூட்டம் ஆனாலும் சரி, நாடாளுமன்றமானாலும் சரி வைகோவின் கர்ஜனை பேச்சு அதிர வைக்கும். ஆனால். வயதின் காரணமாகவும், உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களாலும் பழைய வைகோவை காண முடியவில்லை. இயல்பாகவே ஒரு தந்தை தனக்கு வயதாகும்போதோ உடல்நிலை குன்றும்போதோ தன்னுடைய இடத்தில் மகனை வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வரும். வைகோவுக்கும் அந்த ஆசைதான் வந்தது. ஆனால், வாரிசு அரசியலுக்கு எதிராக உக்கிரமாகக் குரல் கொடுத்த வைகோவுக்கு உறுத்தலும் இருந்தது.

“28 ஆண்டு காலம் என் அரசியல் வாழ்க்கை வீணாகிவிட்டது. என் நிலை என் மகனுக்கு வர வேண்டாம்” என்றெல்லாம் பேசினார் வைகோ. ஆனால், ‘கட்சித் தொண்டர்களின் விருப்பம்’ என்ற அரதப்பழசான அரசியல் உத்திப்படி தன் மகன் துரை வைகோவை தலைமை நிலையச் செயலாளராக்கிவிட்டார். இதற்காக, கட்சி நிர்வாகிகள் மத்தியில் வாக்கெடுப்பும் நடத்தி ஜனநாயகப்படி தன் மகன் தேர்வு செய்யப்பட்டதாகக் காட்டிக்கொள்ளவும் வைகோ தயங்கவில்லை.

அப்போதே மதிமுகவில் சலசலப்புகள் எழுந்தன. அண்மைக்காலமாகவே சகலமும் துரை வைகோ என்ற நிலை மதிமுகவில் உருவாக்கப்பட்ட நிலையில், தலைமை நிலையச் செயலாளர் என்ற பதவியை தலைமைக் கழக செயலாளர் என்று மாற்றி, அதற்கு பொதுக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற வைகோ காய் நகர்த்திக்கொண்டிருந்த வேளையில்தான் எதிர்ப்புக் குரல்கள் வெளிப்படையாகவே வெடிக்கத்தொடங்கின.

இந்த அதிருப்தியின் குரல் வெளிப்படையாக சிவகங்கை மாவட்டத்தில் தான் முதலில் வெளிப்பட்டது. சிவகங்கையில் அதிருப்தி நிர்வாகிகள் ஆலோசனையிலும் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில், சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், அரசியல் உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், வழக்கறிஞர் அணிச் செயலாளர் பாரத மணி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் செவந்தியப்பன் வைகோவுடன் 19 மாதங்கள் பொடா கைதியாக சிறையில் இருந்தவர். மற்றவர்களும் வைகோவுடன் கடந்த 29 ஆண்டுகளாகப் பயணித்து வருபவர்கள்தான். துரை வைகோ மதிமுகவிற்கு வந்த பிறகு கடந்த 9 மாதங்களாக கட்சி கூட்டங்கள் எதிலும் பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறார்கள் இவர்கள். இத்தனை ஆண்டுகளாகப் பயணித்தவர்கள் வைகோவுக்கு எதிராக திரும்ப என்ன காரணம்? அதிருப்தி குழுவில் உள்ள அரசியல் உயர்நிலைக் குழு உறுப்பினர் அழகுசுந்தரத்திடம் பேசினோம்.

“தன்னுடைய மகன் ஸ்டாலினுக்காக என்னை அழிக்கப் பார்க்கிறார் என்று சொல்லித்தான் மதிமுகவை தொடங்கினார் வைகோ. ஆனால், இன்று இவருடைய மகனுக்காக எங்களைப் போன்றவர்களை கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார். சிறு வயதிலேயே அரசியலுக்கு வந்து, மிசாவில் கைதாகி, பிறகு இளைஞரணி மன்றம் வைத்து, அதை இளைஞரணியாக மாற்றி, கருணாநிதியின் கையைப் பற்றி படிப்படியாக வளர்ந்து வந்தவர்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின். அப்படி வந்தவரையே எதிர்த்தவர்தான் வைகோ. ஆனால், வைகோவின் மகன் என்பதைத் தாண்டி துரை வைகோவிடம் இது எதுவுமே கிடையாது.

அழகுசுந்தரம்

இன்று வாரிசு அரசியல் செய்கிறீர்களே என்று கேட்டால், ‘பழையதை எல்லாம் பேசாதீர்கள். அதையெல்லாம் கடந்து வந்துவிட்டேன்’ என்கிறார் வைகோ. தமிழகத்தில் வாரிசு அரசியல் என்பது புதிதல்ல. ஆனால், மற்ற கட்சிகளையும் மதிமுகவையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. எங்களை பொறுத்தவரை, துரை வைகோ இப்போதைக்கு அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொன்னோம். வைகோவின் கடைசி அரசியல் இன்னிங்ஸும், துரை வைகோவின் தொடக்க அரசியல் இன்னிங்ஸும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், வைகோ கேட்கவில்லை” என்றார் அழகுசுந்தரம்.

கடந்த 2006-ம் ஆண்டில் வைகோவுக்கு எதிராக எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தி, போட்டி மதிமுகவை உருவாக்கி, பின்னர் இருவரும் திமுகவோடு ஐக்கியமானார்கள். தற்போது வைகோவுக்கு எதிராக அதிருப்தியில் இருப்போர், திமுகவோடு மதிமுகவை இணைக்க வேண்டும் என்று நேரடியாகவே குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

“இதை ஏன் நாங்கள் சொல்கிறோம் என்றால், மக்களவை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஈரோடு கணேசமூர்த்தி வென்றார். திமுக எம்எல்ஏ-க்கள் ஓட்டு போட்டுத்தான் வைகோ எம்பி-யாக உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் 4 பேர் வென்றார்கள். திமுக சின்னத்தில் நிற்க வேண்டுமென்றால், மதிமுகவிலிருந்து விலகி திமுக உறுப்பினராக வேண்டும். திருமாவளவன் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டார். சட்டப்பேரவைத் தேர்தலில் விசிகவினர் பானை சின்னத்தில்தான் போட்டியிட்டார்கள். ஆனால், மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்பட்சத்தில் பிறகு தனிக்கட்சி எதற்கு? வைகோ எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினால், அதற்கு சட்டரீதியாகப் பதில் கொடுப்போம். எஞ்சிய அரசியல் வாழ்க்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினோடு சேர்ந்து பயணிப்பது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு” என்கிறார் அழகுசுந்தரம்.

அதிருப்தியாளர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் துரை வைகோவை தலைமை கழக செயலாளராக்க அங்கீகாரம் வழங்கப்பட்டது. புதிதாக இரண்டு துணைப் பொதுச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு இக்கூட்டத்தில் பங்கேற்ற 5 பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டனர். பொதுக்குழு கூட்டத்தை அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, செவந்தியப்பன், செங்குட்டுவன், அழகுசுந்தரம் உள்பட முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்தனர்.

கூட்டத்துக்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் யாரையும் இழப்பதற்கு விரும்பவில்லை. என்னுடைய இதயத்துக்குள் வந்தவர்கள், இதயத்தை உடைத்து ரத்தம் கொட்ட செய்துவிட்டுப் போவார்களே தவிர, நான் யாரையும் புண்படுத்தி அனுப்பியது கிடையாது. எனவே, அதிருப்தியாளர்களை நீக்குவது குறித்து தற்போது எதையும் கூற முடியாது” என்று உருக்கமாகப் பேசினர்.

அதே வேளையில் திமுகவோடு மதிமுகவை இணைத்துவிடலாம் என்ற அதிருப்தியாளர்களின் குரல்களுக்கும் வைகோ பதில் அளித்திருக்கிறார். “இந்த கட்சி என்றைக்கும் நிலைநாட்டப்பட்டு உறுதியாக இருக்கும். திமுகவுடன் நல்ல இணக்கமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த இணக்கத்துடன் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

வைகோ அப்படி பேசியிருந்தாலும் அதிருப்தியாளர்களைக் கட்சியை விட்டு கட்டம் கட்டும் பணிகளை மதிமுக தலைமை செய்யத் தொடங்கியிருக்கிறது. இதுதொடர்பாக மதிமுகவின் கருத்தை அறிய துரை வைகோவை தொடர்புகொண்டோம் போனை எடுக்கவில்லை. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும் பேசவில்லை.

மகனை முன்னிறுத்தும் வைகோவின் முடிவு பற்றியும் திமுகவோடு மதிமுகவை இணைக்க வேண்டும் என்ற அதிருப்தியாளர்களின் எண்ணங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் சு.குமரேசனிடம் பேசினோம்.

“தொண்டர்களின் விருப்பப்படிதான் துரை வைகோ கட்சிக்குள் வந்தார் என்று வைகோ சொல்கிறார். அதுபோலத்தான் அன்று தொண்டர்களின் விருப்பப்படிதான் ஸ்டாலினும் வந்தார். அன்று எதை ஏற்க மறுத்த வைகோ, இன்று மகனுக்காகப் பேசத் தொடங்கியிருப்பதன் மூலம் அவர் பக்குவப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அடுத்து, மதிமுகவை திமுகவோடு இணைக்க வேண்டும் என்ற கருத்து தவறானது. பாஜகவுக்கு நிறைய துணை அமைப்புகள் உண்டு. பாஜக பேச முடியாதவற்றை துணை அமைப்புகள் மூலம் பேசுவார்கள். அதுபோல திமுக பேச முடியாதவற்றை தி.க., மதிமுக போன்ற கட்சிகள் பேச முடியும். அதற்கு மதிமுக தனித்து செயல்பட வேண்டும். ஒப்பீட்டளவில் தி.க.வைவிட மதிமுக தொண்டர்கள் பலமுள்ள கட்சி. கொள்கை சார்ந்த விஷயங்களில் பெரிய கட்சியான திமுகவுடன் மதிமுக இணைந்து செயல்படுவது இரு கட்சிகளுக்குமே பலன் தரும்” என்றார் குமரேசன்.

எப்படியிருந்தாலும் வாரிசு அரசியலை எதிர்த்து உருவாக்கப்பட்ட மதிமுகவிலே வாரிசு அரசியல் சர்ச்சை எழுந்திருப்பது ஒரு நகைமுரண். உணர்ச்சிவசப்பட்டு வைகோ எடுத்த முடிவுகள் கடந்த காலங்களில் கட்சிக்கு பின்னடைவையே தந்திருக்கிறது. மகன் விஷயத்தில் வைகோ எடுத்துள்ள முடிவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை காலம் உணர்த்தும்!

x