அதிமுகவை பாஜக அழிக்க முயற்சிக்கிறது - கொமதேக ஈஸ்வரன் பேச்சு


ஈஸ்வரன்

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் மாநில கட்சிகளை அக்கட்சி அழித்துவிடும் என பரவலாக எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையிலான அரசியல் நிகழ்வுகள் நாடெங்கும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் எதிர்கட்சி அதிமுக, பாஜகவா என்ற சந்தேகம் எழும் வகையில் பாஜகவின் செயல்பாடுகள் உள்ளது என பரவலாக எதிர்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இச்சூழலில் நாமக்கல்லில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கொமதேக சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அதிமுகவை, பாஜக அழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக பாஜக மீது சுமத்தினார்.

விழாவில் ஈஸ்வரன் எம்எல்ஏ பேசியதாவது: "நாளுக்கு நாள் எகிறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை, மறுபரிசீலனை செய்து, திரும்பப்பெற வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றுள்ளார். அவரை கொச்சைப்படுத்தும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசரப்பட்டு பேசி வருகிறார்.

முதல்வர், தமிழகம் திரும்பியவுடன், வெளிநாடு முதலீடு ஈர்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளார்.

தமிழகத்தில், அதிமுகவை அழிக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக ஆளுநர் வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருகிறார். தமிழக மக்கள் மத்தியில், அவர் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறார். இதன்மூலம் மத்திய அரசுக்கும் அவர் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறார்" என்று ஈஸ்வரன் பேசினார்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், நாமக்கல் எம்பி ஏ. கே. பி. சின்ராஜ், எம்எல்ஏக்கள் பெ. ராமலிங்கம், பொன்னுசாமி, கொங்குநாடு பேரவை தலைவர் தேவராஜன் உள்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

x