போராடிய பாஜகவினர் கைது முதல் கள்ளக்குறிச்சி விசாரணை நிலவரம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, சனிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுட்ட ஆயிரக்கணக்கான பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். முன்னதாக, நான்கு புறங்களிலும் தடுப்புகளை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த வருபவர்களை போலீஸ் வேன், அரசு பஸ்களில் ஏற்றி காவல் துறையினர் உடனுக்குடன் கைது செய்து திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பாஜகவினர் திமுக அரசை கண்டித்தும் கள்ளச்சார சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும், திமுக அரசின் அராஜக போக்கை கண்டித்தும் முழக்கமிட்டனர். தொடர்ந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட பாஜக வினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

> “கள்ளச் சாராய விவகாரத்தில் திமுகவினருக்கு தொடர்பு” - இபிஎஸ்: சட்டப்பேரவையில் இருந்து சனிக்கிழமையும் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறும்போது, “காவல் துறைக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனையை செய்திருக்க முடியாது. மேலும், திமுக கவுன்சிலர்கள் 2 பேருக்கும், திமுக மாவட்டச் செயலாளருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இவ்விவகாரத்தில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை வேண்டும். இதையொட்டியே நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளோம். நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து பயந்து வெளியேறவில்லை. முதல்வருக்கு தைரியம் இருந்திருந்தால் எங்களுடன் விவாதித்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

> “குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்!”: “கள்ளச்குறிச்சி சம்பவத்தில் எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்” என திமுக எம்எல்ஏ-க்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறும்போது, "பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சி தலைவர் அன்புமணிக்கும் எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இது தொடர்பாக அவர்கள் இருவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளோம்” என்று கூறினர்.

இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கு எதிராக கருத்து தெரிவித்த, திமுக எம்எல்ஏக்களை கண்டித்து, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் பாமகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

> இந்தியா - வங்கதேசம் இடையே 10 ஒப்பந்தங்கள்: சுகாதாரம், மீன்பிடி தொழில் உள்பட இந்தியா - வங்கதேசம் இடையே 10 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியதாக வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரு தலைவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனிடையே, இந்தியா - வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தங்கள் நாட்டுக்கு வர வேண்டும் என்று ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.

> அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 3 ஆண்டு சிறை: அரசு தேர்வு வினாத்தாளை கசியவிடுதல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட அறிவிப்பில், “பொதுத் தேர்வுகள் சட்டம், 2024-ன் பிரிவு 1ன் துணைப் பிரிவு 2-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தச் சட்டம் அமலுக்கு வரும் தேதியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்த சட்டம் ஜூன் 21, 2024 தேதி முதல் அமலுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

> மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை: மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசிப்பதற்கான கூட்டம் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை கூடியது. இதில், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்பட மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர்.

> உயர்மட்ட குழு அமைத்தது மத்திய அரசு: நீட், நெட் உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

> “கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை”: “சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்தச் சம்பவத்தையை மறைக்க பார்த்தார். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறினார். இதனால்தான், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணை கோரியது. ஆனால், நாங்கள் இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக இருக்கிறோம். எனவே, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

> கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் 10 பேர் கைது: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் சாராய வியாபாரி கண்ணுகுட்டி , அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகிய மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மூன்று பேரையும் வரும் ஜூலை 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சின்னதுரை வெள்ளிக்கிழமை தனிப்படை போலீஸாரால் பண்ருட்டி அருகே கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய புதுச்சேரி ஜோசப்ராஜா என்ற குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் சிபிசிஐடி வசம் சிக்கியுள்ள மதன்குமார், கடந்த ஆண்டு எக்கியார்குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்து 12 பேர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். சமீபத்தில்தான் அவர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். வெளியே வந்ததும் மீண்டும் மெத்தனால் விற்க முடிவெடுத்துள்ளார்.

இம்முறை சென்னையிலிருந்து மெத்தனால் வாங்காமல் ஆந்திராவில் உள்ள புரோக்கர் மூலம் மெத்தனாலை வாங்கி வந்து விற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து போலீஸார் கண்காணித்திருந்தாலே கள்ளக்குறிச்சியில் 50-க்கும் மேற்பட்ட உயிர் பலி நிகழ்ந்திருக்காது” என்று கருத்தும் எழுந்துள்ளது.

> விழுப்புரத்தில் 3 நாட்களில் 173 வழக்கு - 165 பேர் கைது

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விழுப்புரத்திலும் விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அங்கு வெள்ளிக்கிழமை வரை சாராயம், மதுபாட்டில்கள், கள் விற்பனை செய்ததாக 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 165 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? அவர்களில் எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

x