“பொடோ கைதியாக வேலூர் சிறையில் இருந்த போது சகல வசதிகளையும் நான் அனுபவித்ததாக மதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார். அவருக்கு மனசாட்சியே கிடையாதா, இதயமே கிடையாதா?” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் பேசியிருக்கிறார்.
திருச்செங்கோட்டில், மறைந்த நாமக்கல் மாவட்ட மதிமுக முன்னாள் செயலாளர் டி.என்.குருசாமி படத் திறப்பு விழா நேற்று (மார்ச் 26) நடந்தது. அதில் கலந்துகொண்டு அவரது படத்தைத் திறந்துவைத்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசியபோது, “திமுகவில் இருந்து நான் நீக்கப்பட்டபோது வீரபாண்டியாரின் தளகர்த்தர்களில் ஒருவராக இருந்த டி.என்.குருசாமி என் மீது கொண்ட அன்பால் என்னுடன் இணைந்தார். இரங்கல் கூட்டத்தில் அரசியல் பேசக் கூடாது. ஆனாலும் என்னைப் பற்றி தவறாக யாராவது சொல்லும்போது மறைந்த குருசாமி துடித்துப் போய்விடுவார். அதனால் இதைச் சொல்ல வேண்டியவனாய் சொல்கிறேன். பொடா கைதியாக வேலூர் சிறையில் இருந்தபோது சகல வசதிகளையும் நான் அனுபவித்ததாக வேலூர் சுப்பிரமணியம் என்பவர் கூறியதாக மதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவர் தொலைக்காட்சி பேட்டியில் மனசாட்சியே இல்லாமல் கூறுகிறார்.
சிறையில் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் உணவைத்தான் உண்டேன். சட்ட விதிகள் இருந்தும் நான் அசைவம் சாப்பிட்டதில்லை. ஒரு முட்டை கூட சாப்பிட்டதில்லை. சிறை நிர்வாகம் எனக்கு மின்விசிறி வழங்க முன்வந்த போது 2 ஆயிரம் சக கைதிகளுக்கும் தருவதாக இருந்தால் நான் பெற்றுக்கொள்கிறேன் எனக் கூறினேன். கட்சியின் பொறுப்பில் இருப்பவர் மனசாட்சியை ஆழ குழிதோண்டி புதைத்துவிட்டு பேட்டி கொடுத்திருக்கிறார். மனசாட்டியே கிடையாதா இதயமே கிடையாதா எனக் கேட்க விரும்புகிறன்.
இவர்களுக்கு மத்தியில் டி.என்.குருசாமி போன்ற விசுவாசிகளை இழந்தது மனதை கனக்க வைக்கிறது” என உருக்கமாகப் பேசினார்.
மதிமுகவை, திமுகவுடன் இணைக்க வேண்டும் என அக்கட்சிக்குள் குரல்கள் எழும்பியுள்ள நிலையில் வைகோ தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.