கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை தேவை: பீட்டர் அல்போன்ஸ்


பீட்டர் அல்போன்ஸ்

தென்காசி: கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் சம்பவம் தொடர்பாக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்போது இந்த சம்பவம் நடந்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

எனவே, ஆணையம் எல்லா கோணத்திலும் ஆராய்ந்து, இந்த சம்பவத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை வேண்டும். கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புச் சம்பவங்கள் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை எந்த வகையிலும் பாதிக்காது. அங்கு திமுக வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தனது வைப்பு தொகையை இழப்பார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் நீட் தேர்வில் மிகப் பெரிய குளறுபடிகள் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது நீட் தேர்வு தொடங்கப் பட்டதன் நோக்கத்தையே கொச்சைப்படுத்துகிறது. இது மாதிரியான செயல் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வருகிறது. நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் அனைத்தும் நியாயம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதிக மாநிலங்களில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது” என்றார்.