நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்தி வழங்க தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் கோரிக்கை


பிரதிநிதித்துவப் படம்

கும்பகோணம்: மத்திய அரசு கரீப் பருவத்திற்கு அறிவித்துள்ள நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய அரசு ஆண்டுதோறும் கரீப் பருவமான அக்.1-ம் தேதி முதல் செப். 31-ம் தேதி வரையில் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நெல்லுக்கான ஆதரவு விலையைக் கடந்த 19-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த ஆண்டு கடந்தாண்டை விட ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 117 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், ஒரு குவிண்டால் எள் ரூ. 632-ம், காட்டு எள் ரூ. 983-ம், சோளம் ரூ. 191-ம், கேழ்வரகு ரூ. 444-ம், மக்காச்சோளம் ரூ. 135-ம், பயத்தம் பருப்பு ரூ. 124-ம், எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை வித்து ரூ. 406-ம், சூரியகாந்தி வித்து ரூ.520-ம், சோயாபீன் வித்து ரூ. 292-ம் என உயர்த்தி அறிவித்துள்ளது. ஆனால், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கடந்தாண்டை விட ரூ. 117 என உயர்த்தி அறிவித்துள்ளது மிகவும் குறைவான தொகை என்பதால், மத்திய அரசு, நெல்லுக்கான ஆதரவு விலையை, சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அறிவித்துள்ளது போல் அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன், “மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாகக் கடந்தாண்டு அறிவித்ததை விட வெறும் 5 சதவீதத்தை மட்டுமே இந்த ஆண்டு உயர்த்தி (ஆகக் கூடுதலாக ரூ.2,300) அறிவித்துள்ளது. ஆனால், தமிழக விவசாயச் சங்கங்கள் வேளாண்மை பல்கலைக் கழகங்களில் நெற்பயிர் உற்பத்தி செய்வதற்காக ஆகும் செலவினங்களைக் கணக்கிட்டு, குவிண்டாலுக்கு ரூ. 3,660 வழங்க வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம், நெல்லுக்கான ஆதரவு விலையைக் குறைவாகக் கணக்கிட்டு வழங்கி உள்ளது. இதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். கரீப் பருவ காலமான அக்.1-ம் தேதி முதல் செப். 1-ம் தேதி வரையிலான இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகள், உற்பத்தி செலவினங்கள் மற்றும் நெல் சாகுபடிக்கான இடு பொருட்களின் விலை கடந்தாண்டை விட 3 மடங்கு உயர்ந்துள்ளது உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிடாமல் மத்திய அரசு அறிவித்துள்ளது தவறாகும்.

பாஜக ஆளும் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள், நெல்லுக்கான ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,100 என அறிவித்துள்ளனர். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான ஆதரவு விலையை, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்கள் அறிவித்திருப்பதைப் போல குவிண்டாலுக்கு ரூ. 3,100 என உயர்த்தி வழங்க வேண்டும்” என்றார்.