மே 20-ல் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி


நீலகிரியில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி மே மாதம் 20,21,22,23 மற்றும் 24-ம் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும். இதில் முக்கியமாக ரோஜா காட்சி, மலர் கண்காட்சி மற்றும் பழக்காட்சி ஆகியவை அடங்கும்.

உதகை மலர்க்கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது என்பதால் மலர் கண்காட்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி கண்டு ரசித்து செல்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தாண்டு 124-வது மலர் கண்காட்சி நடக்கிறது. அதற்கான ஆலோசனை கூட்டம் தோட்டக்கலைத்துறை ஆணையர் பிருந்தா தேவி தலைமையில் உதகையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர்( பொ) சிபிலா மேரி, நகராட்சி ஆணையர் காந்திராஜ் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன் பின்னர் தோட்டக்கலைத்துறை ஆணையர் பிருந்தா தேவி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தாண்டு கோடை விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் மே மாதம் 20,21,22,23 மற்றும் 24-ம் தேதிகளில் 124-வது மலர் கண்காட்சியும், மே 28 மற்றும் 29-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்காட்சியும், மே 14 மற்றும் 15-ம் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, கோத்திகிரி நேரு பூங்காவில் மே மாதம் 7 மற்றும் 8-ம் தேதிகளில் 11-வது காய்கறி கண்காட்சியும், மே மாதம் 13,14 மற்றும் 15-ம் தேதிகளில் கூடலூரில் 9-வது வாசனை திரவிய கண்காட்சி நடக்கிறது. கோடை விழா சிறப்பாக நடக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. காட்சிகளில் இடம்பெறும் சிறப்பு அலங்காரங்கள் குறித்து ஆலோசித்து, முடிவு செய்யப்படும்'' என்றார்.

x