வங்கதேசம் வழியாக வெளிநாட்டு துணிகள் இறக்குமதி: தடை விதிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கம் வலியுறுத்தல்


விசைத்தறி சங்க கூட்டம்

ஈரோடு: வங்கதேசம் வழியாக வரி இல்லாமல் இறக்குமதியாகும் வெளிநாட்டு துணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது. மாநில செயலாளர் ரா.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில், கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள விசைத்தறி நலனுக்கான பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் வகையில் அதனை மத்திய அரசின் செயல் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கைத்தறி ரக ஒதுக்கீடு மறு சீராய்வு மற்றும் விசைத்தறிக்கான தனி ரக ஒதுக்கீடு ஆகியவற்றை மத்திய அரசு வழங்க வேண்டும். 13 மாத பழைய ஜிஎஸ்டி ரீஃபண்ட் மற்றும் செலுத்திய அபராத தொகையை நெசவாளர்களுக்கு மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழக அரசால் 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாயக் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அதனை பைப்லைன் மூலம் கடலில் கலக்கும் மரைன் டிஸ்சார்ஜ் திட்டத்தை மீண்டும் புத்துயிர் கொடுத்து செயல்படுத்த வேண்டும்.

அரசு சார்ந்த அனைத்து துறையினர் சீருடைகள் மற்றும் மருத்துவத் துணி உபகரணங்களை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்து வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறிகளை மேம்படுத்த எம்எஸ்எம்இ மூலம் கொடுக்கப்பட்டு வரும் 25 சதவீத மானியத்தை 50 சதவீத மானியமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மத்திய அரசு காட்டன் கார்ப்பரேஷன் என்ற அமைப்பைப் போல் காட்டன் கார்ப்பரேஷன் தமிழ்நாடு என்ற அமைப்பை தமிழக அரசு முறைப்படுத்தி பஞ்சு கொள்முதல் செய்ய வேண்டும். தமிழக அரசின் மினி டெக்ஸ்டைல் பார்க் உருவாக்க போதிய நிலம் விசைத்தறி நெசவாளர்களிடம் இல்லாத காரணத்தால், செயல்படாத நிலையில் உள்ள நூற்பாலைகளின் காலியிடம் மற்றும் கட்டிடங்களை பயன்படுத்த வேண்டும்.

இலவச வேட்டி சேலை மற்றும் பள்ளி சீருடைக்கான 30 சதவீத உற்பத்தி கூலியை தமிழக அரசு வழங்க வேண்டும். வங்கதேசம் வழியாக வரி இல்லாமல் இறக்குமதியாகும் வெளிநாட்டு துணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய அரசு வெளிநாடுகளுக்கு வரியில்லா ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர்கள் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன், பா.கந்தவேல் உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.