பேரிஜம் ஏரி பகுதிக்குள் புகுந்த யானைக்கூட்டம்!


காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை எழில் சூழ்ந்த மோயர் பாயிண்ட், தொப்பி தூக்கும் பாறை, அமைதிப்பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில் பேரிஜம் பகுதிக்குச் செல்ல வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஏனெனில் இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த பகுதியில் இன்று அதிகாலை காட்டுயானைகள் கூட்டமாக வந்திருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை தற்காலிக தடை விதித்தது.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "இன்று அதிகாலை யானைக்கூட்டம் பேரிஜம் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் அகன்ற பின்பு சுற்றுலா பயணிகள் ஏரிப்பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள்" என்று கூறினார். இதன் காரணமாக பேரிஜம் வனப்பகுதி மூடப்பட்டது. இதனால் பேரிஜம் ஏரியைக் காண ஆவலுடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

x