சைரன் கார், மத்திய போலீஸ் பாதுகாப்பு... எல்லாமே டூப்பா பிரபு?


இரிடியம் மோசடி வழக்கில் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் ராம்பிரபு ராஜேந்திரனிடம் நாங்களும் ஏமாந்திருக்கிறோம் என்று நடிகர் விக்னேஷ் உள்பட நிறைய பேர் வரிசை கட்டி புகார் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். யார் இந்த ராம்பிரபு?

சைரன் வைத்த கார், சபாஃரி அணிந்த துப்பாக்கிக் காவலர்கள், கோயில்களுக்கு லட்ச லட்சமாய் நன்கொடை, ஆர்பிஆர் பேரவை என்ற பெயரில் அலட்டலான பிறந்த நாள் கொண்டாட்டங்கள், அதில் ஹெலிகாப்டர் மலர்த்தூவ கையிலும் கழுத்திலும் சுமக்க முடியாத அளவுக்குத் தங்க நகைகளை அணிந்துகொண்டு வலம்வந்த புதிர் மனிதர்தான் ராம்பிரபு ராஜேந்திரன். கிருஷ்ணன்கோவில் அருகே ஈஸ்வரன் கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியவர். பல ஊர்களின் கோயில் விழாக்குளுக்கு லட்ச லட்சமாய் நன்கொடை கொடுத்திருக்கிறார். பின்னாலேயே தனது அடிப்பொடிகளை அனுப்பி 10, 15 ஃபிளக்ஸ் போர்டுகளை வைத்து தனக்குத்தானே விளம்பரமும் செய்துகொள்வார். அந்த ரசிக அடிப்பொடிகள் தொடங்கிய ஆர்பிஆர் பேரவைக்கு தஞ்சை மாவட்டம் வரையில் கிளைகள் உண்டு.

’சதுரங்கவேட்டை நாயகன்’ பயங்கரக் கருப்பாய் குண்டாய் இருந்தால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறார் ராம்பிரபு ராஜேந்திரன். பிறந்தது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சுந்தரபாண்டியம் பேரூராட்சி அரிஜன தெற்குத் தெரு என்கிறது போலீஸாரின் முதல் தகவல் அறிக்கை. ஆனால், அவரது பண்ணை வீடோ கிட்டத்தட்ட ஒரு மத்திய அமைச்சரின் வீடு போல பிரம்மாண்டமானது. கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தைத் தாண்டியதும் சாலையின் வலதுபுறம் அமைந்திருக்கிறது அவரது பண்ணை வீடு. வாசலில் ரிசர்வ் வங்கி என்று எழுதப்பட்ட இன்னோவா கார். இன்னொரு காரில் சைரன். வாசலில் நான்கைந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள். அவர்கள் காவலர்கள் இல்லை, அடியாட்கள் என்பதும், அவர்கள் வைத்திருந்தது டம்மி துப்பாக்கி என்றும் இப்போது போலீஸ் சொல்கிறது.

பண்ணை வீட்டிற்குள் ஒரே கடியில் முக்கால் கிலோ கறியை கொத்தாக எடுத்துவிடும் முரட்டு முரட்டு நாய்கள் நிற்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகளும் உண்டு. இவரைப் பார்க்க அந்த பண்ணை வீட்டுக்கு பல பெரிய மனிதர்கள், பினாமிகள், நடிகர்கள் எல்லாம் வருவதுண்டு. அப்படி என்ன அந்தப் பண்ணையில் நடக்கிறது என்று மோப்பம் பிடித்த கிருஷ்ணன்கோவில் போலீஸார், பிறகு அவரது பாதுகாவலர்களாகவே மாறிவிட்டார்கள். அவ்வளவு கவனிப்பு. அங்கே போய் ஏதாவது, வம்பு தும்பு பண்ணினாலோ, சத்தமாகப் பேசினாலோ தொலைந்தார்கள். பண்ணை வீட்டுக்குப் போய்விட்டு திரும்பிவருகிற வழியில், வண்டி நம்பரைப் பார்த்து மடக்குகிற அவுட் போஸ்ட் போலீஸார் அவர்களை படுத்தியெடுத்துவிடுவார்கள். அவ்வளவு விசுவாசம். ஏமாந்த பணத்தைத் திரும்பக் கேட்டுப்போன சிலர், இப்படி வழக்குக்கு உள்ளாகி சிறைக்குப் போனது உண்டு.

மோசடி செய்தே வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவரான இவர் கடந்த 2014ம் ஆண்டில் இருந்தே இரிடியம் மோசடியில் ஈடுபட்டுவந்திருக்கிறார். எல்லோரிடமும் ஒரே கதைதான். மத்திய அரசின் அனுமதியோடு நான் செய்த இரிடியம் பிஸினஸில் பல லட்சம் கோடி பணம் வந்திருக்கிறது. அதனை ரிசர்வ் வங்கியில் இருந்து மொத்தமாக எடுக்க முடியாது. பெரிய பணம் என்பதால், பங்குதாரர்கள் சேர்ந்துதான் எடுக்க வேண்டும், அதற்கு நீங்கள் உதவலாம். ஒரு லட்சம் கொடுத்தால் 1 கோடி, 10 லட்சம் கொடுத்தால் 10 கோடி என்று சொல்லியே சிட்டையைப் போட்டிருக்கிறார். இதற்கு இவருக்கு தமிழ்நாடு முழுக்க நிறைய ஏஜென்டுகள் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இவரிடம் முதலீடு செய்த பலர், கருப்புப்பணத்தையே கொடுத்திருக்கிறார்கள். இவரது டார்கெட்டும் அதுதான். அப்போதுதானே புகார் கொடுக்க மாட்டார்கள்? ஒரு லட்சம் கொடுத்தால் 1 கோடி என்று சொல்லி பணத்தை வசூலிக்கும் இவர், அதில் வாங்கிய ஒரு லட்சத்தில் 10 ஆயிரத்தை அந்த ஏஜென்டுக்கு கமிஷனாக கொடுத்திருக்கிறார். நெருக்கடி முற்றி அவர்கள் பார்ட்டியுடன் சேர்ந்து வந்தால், தம்பி நீயும் கமிஷன் வாங்கியிருக்க மறந்திடாதே... ஒழுங்கா பார்ட்டியை கன்வின்ஸ் பண்ணு. இல்லைன்னா உனக்கும்தான் பிரச்சினை என்று சொல்லியே பல பிரச்சினைகளை அமுக்கியிருக்கிறார்.

தனது ஏஜென்ட் ஒருவரிடம் ராம்பிரபு பணம் கேட்கும் செல்போன் உரையாடலின் குரல் பதிவு ஒன்று வழக்கறிஞர் ஒருவர் மூலம் நமக்குக் கிடைத்தது. அதில் ராம்பிரபுவின் குரல் என்ன சொல்கிறது தெரியுமா?

"நான் என்ன சொல்றேன். உங்களுக்கு 50 ஆயிரம் கோடி தர்றேன் என்கிறேன். எவனாவது இப்படிச் சொல்வானா? ஊர் ஊராக (கெட்டவார்த்தை சொல்கிறார்) போய் பிச்சை எடுத்தாலும் இவ்வளவு காசை எத்தனை நாளில் சம்பாதிக்க முடியும்? நாளைக்கே பணம் வந்துவிட்டால், கொடுத்துவிடுவேன். நிறைய பேர் வரிசையில் நிற்கிறான். நான் எவ்வளவோ தியாகம் செய்து, ஒரு நல்லது நடக்கட்டும் என்று இந்த நாலு நாளா என்னை நானே கன்ட்ரோல் பண்ணி, உருக்கி... சொல்லுங்க பார்ப்போம். எந்த விஷயம் நடந்தாலும் ஈசனை கேட்காமல் செய்ய மாட்டேன் நான். அவ்வளவு பெரிய யாகம் எல்லாம் நடத்தியவன் நான் தெரியும்ல. எல்லோருக்கும் நல்லது நடக்கணும்னு தானே நான் இவ்வளவு கஷ்டப்படுறேன். சொல்லுய்யா... நான் யார்கிட்டையாவது டாக்குமென்ட் ஃபைலை ஓப்பன் பண்ணி காட்டியிருக்கேனா? உன்கிட்ட காட்டுனேன். ஒரு பாய் பத்து கோடி தர்றேன், 20 கோடி தர்றேன் என்றானே அவன்கிட்ட காட்டினேனா? நீ ரொம்ப வேண்டியவன். நாளைக்கு ஒரு 50 லட்சம் மட்டும் கொண்டுவந்து கொடு. 5ம் தேதி நான் உனக்கு 50 கோடி பணம் தர்றேன். நம்பிக்கை இல்லை என்றால் எப்படி பிஸினஸ் பண்ணுறது?" இப்படிப் போகிறது அந்த உரையாடல். அவருடன் பேசுபவர் இந்தக் கதையை ஆயிரம் முறை கேட்டு அலுத்துப் போனவர் போல. ஆர்வமே இல்லாமல் 'உம்' கொட்டுகிறார்.

சிக்கியது எப்படி?

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த முஹம்மது தமீம் புகாரில்தான் ராம்பிரபு ராஜேந்திரன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றாலும், இதன் பின்னணியில் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்பி ஒருவரின் உறவினர் சில கோடிகளை இவரிடம் முதலீடு செய்து ஏமாந்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அன்றைய விருதுநகர் மாவட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து முறையிட, ராஜேந்திரபாலாஜி தலையிட்டு அந்தத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொடுத்ததாக உறுதி செய்யப்படாத தகவல் உண்டு.

இப்போது இவர் கைது செய்யப்பட்டதற்குக் காரணம், இன்றைய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் என்கிறார்கள். அண்ணாச்சி அவ்வளவு நியாயமானவரா? என்று அதிர்ச்சியடைய வேண்டாம். ராம்பிரபுவின் சொந்த ஊர் சுந்தரபாண்டியம் என்று ஏற்கெனவே சொன்னோம் அல்லவா, அந்தப் பேரூராட்சியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7, அதிமுக 7, சிபிம் 1 என்று வெற்றிபெற்றன. தன்னுடைய சொந்த ஊரில் தன்னுடைய தம்பி சிட்டிபாபுவை பேரூராட்சித் தலைவராக்கினால் என்று நினைத்த ராம்பிரபு, திமுக கவுன்சிலர்களை விலை பேசியிருக்கிறார். விஷயம் மாவட்ட செயலாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். காதுக்குப் போக, வேண்டாம் என்று எச்சரித்ததாகவும், ராம்பிரபு கேட்காததால் அவர் மீதான பழைய வழக்கு தூசு தட்டி எடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையம் தொடங்கி, ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி அலுவலகம், விருதுநகர் எஸ்பி அலுவலகம் வரையில் ராம்பிரபுக்கு செல்வாக்கு உண்டு. அதை மீறி அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதற்கு இன்றைய போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபுவும் ஒரு காரணம் என்கிறார்கள். அவர் உத்தரவின்படியே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறார்கள்.

இந்த மனிதரைப் பற்றிய நிறைய புதிர்கள் இருக்கின்றன. அவரை போலீஸ்காவலில் எடுத்து விசாரித்தால் அவை எல்லாம் வெளிவரும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அதற்கு உள்ளூர் போலீஸார் எந்தளவுக்கு ஒத்துழைப்பார்கள் என்பது சந்தேகமே.

x