இன்னும் எதற்காக மென்று முழுங்குகிறார் ஓபிஎஸ்?


ஜெயலலிதா

ஜெயலலிதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாகச் சொல்லி தர்மயுத்தம் நடத்திய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்துள்ள வாக்குமூலங்கள் விநோதமாகவும் வேடிக்கையாகவும் இருப்பதாக அதிமுக வட்டாரத்திலேயே பரிகாசம் செய்கிறார்கள்.

“அம்மா மரணத்தில் எந்த சந்தேகமும் தனக்கு இல்லை என்று இப்போது சொல்லும் இவர் எதற்காக தர்மயுத்த நாடகம் நடத்தினார்?” என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் அதேசமயம், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் இது விஷயமாக பேசினோம். “இன்னும் எதற்காக இவர் மூடி மூடிப் பேசுகிறார் என்று தெரியவில்லை” என்ற ஆதங்கத்துடன் பேசிய அவர்கள், “ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட 2016 செப்டம்பர் 22-ம் தேதி, தனது தொகுதிக்குள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இரவு லேட்டாகத்தான் பெரியகுளம் வீட்டுக்கு வந்தார் ஓபிஎஸ்.

இரவு 12 மணி சுமாருக்கு சென்னையிலிருந்து ஓபிஎஸ்சின் ஸ்பெஷல் பி.ஏ-வான நாகராஜ் அவருக்கு போன் அடித்திருக்கிறார். அசதியில் தூங்கிவிட்டதால் போனை எடுக்கவில்லை ஓபிஎஸ். அதன்பிறகு வீட்டு சமையல்காரர் உள்ளிட்ட இரண்டு மூன்று நபர்களுக்குப் போன் போட்டுத்தான் ஓபிஎஸ்சை லைனில் பிடித்திருக்கிறார் நாகராஜ். அப்போது இரவு 1 மணி இருக்கும். அம்மா அப்போலோவில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியைக் கேட்டதுமே சத்தம்போட்டு கதறிய ஓபிஎஸ், ‘வித்தியாசமா என்னமோ நடந்திருக்கு’ என்று அரற்றி இருக்கிறார். அதற்குள்ளாக அக்கம் பக்கத்தில் கட்சிக்காரர்கள் வந்துவிட்டார்கள். அதற்கு மேல் இருப்புக் கொள்ளாத ஓபிஎஸ், அப்போதே சென்னைக்குக் கிளம்ப மதுரை ஏர்ப்போர்ட்டுக்குப் புறப்பட்டுவிட்டார்.

வரும் வழியில் கணவாய் கருப்பு கோயிலில் காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கி கருப்பரை வேண்டியவர், அங்கேயும் எதையோ நினைத்து நினைத்து அழுதார். காலை 8 மணிக்கு மேல் தான் ஃபிளைட் என்றாலும் வீட்டில் இருக்க அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

ஓபிஎஸ்

வழக்கமாக மதுரை திருமங்கலம் - ஏர்போர்ட் சாலையில் கப்பலூர் மேம்பாலத்துக்கு அருகில் உள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் உள்ளிட்ட விஐபி-க்கள் தங்குவதுண்டு. அன்றைய தினம் அந்த ஓட்டலில் அனைத்து அறைகளும் புக்காகி இருந்ததால் மேனஜர் அறையில் குளித்து முடித்து ரெடியாகி காலை ஏழு மணிக்கு ஏர்போர்ட்டுக்குப் புறப்பட்டார். அப்போதும் அவர் அழுதுகொண்டு தான் இருந்தார்.

அம்மாவுக்கு வித்தியாசமா ஏதோ நடந்துவிட்டது என்பதுதான் எங்கள் மத்தியில் அன்றைக்கு அவர் சொன்ன செய்தி. இனிமேல் அவர் பிழைக்கமாட்டார் என்பது அப்போதே ஓபிஎஸ்சுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் அழுது தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். தர்மயுத்தம் நடத்திய சமயத்தில், வலுவான காரணம் ஏதும் இல்லாமல் அம்மாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை நிச்சயம் அவர் கிளப்பி இருக்க மாட்டார்.

அதுமாத்திரமல்ல... அம்மா சிகிச்சையில் இருந்த நாட்களில் முக்கிய அமைச்சர் ஒருவர் உள்பட பலரும் ஓபிஎஸ்சின் பேச்சை உதாசீனப்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஓபிஎஸ்சுக்கு எதுவும் தெரியக்கூடாது என்பதிலும் கவனமாய் இருந்திருக்கிறார்கள். அதிகாரம் தன்னிடத்தே இருந்தாலும் அவர்களை எல்லாம் எதிர்த்துக் கேட்கும் தைரியம் அன்றும் ஓபிஎஸ்சுக்கு இல்லை. இதையெல்லாம் தனக்கு நெருக்கமானவர் களிடம் அப்போதே வேதனைப்பட்டு அவர் பகிர்ந்திருக்கிறார்.

அப்படியெல்லாம் வேதனைப்பட்டவர், இப்போது ஆணையத்தில் அளித்திருக்கும் பதிலைப் பார்த்தால் சிரிக்கத்தான் வேண்டி இருக்கிறது. அன்றைய தினம் அம்மாவுக்கு என்ன நடந்திருக்கும் என நினைத்து அதை வெளியில் சொல்லமுடியாமல் வெதும்பி அழுதாரோ அதையெல்லாம் ஆணையத்தில் சொல்லி இருக்க வேண்டியதுதானே. இன்னும் எதற்காக மென்று முழுங்குகிறார் ஓபிஎஸ்? குறைந்தபட்சம் தனக்கு அப்போது இருந்த சந்தேகங்களையாவது மறைக்காமல் சொல்லி இருக்கலாமே?” என்று சொன்னார்கள்.

x