மதுவிலக்கை அமல்படுத்த கோரி பெரிய அளவில் போராட்டம்: பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு


கள்ளச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்த பாமக தலைவர் அன்புமணி.படம்: செ.ஞானபிரகாஷ்

கள்ளக்குறிச்சி / சென்னை: கள்ளச் சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பாமக தலைவர் அன்புமணி நேற்று சந்தித்து, ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்பகுதியில் 40 ஆண்டுகளாக கள்ளச் சாராயம் விற்கப்படுகிறது.

தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உடந்தையாக இருந்த காவல் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளை தண்டிக்கவில்லை. சிபிசிஐடி விசாரணை என்பது வெறும் கண்துடைப்புதான். எனவே, உயிரிழப்புக்குப் பொறுப்பேற்று அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

காவல் நிலையத்தின் பின்புறத்தில்தான் கள்ளச் சாராயம் விற்கப்பட்டுள்ளது. எனவே, சிபிஐ விசாரணை கேட்டு பாமக வலியுறுத்தும். அதேபோல, கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் பாமக சார்பில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம். விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அன்புமணி கூறினார்.

ஜூன் 25-ல் தேமுதிக போராட்டம்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து தேமுதிக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 25-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.