சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளை காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கது. கள்ளச்சாராய உயிரிழப்புகளை காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த ஒன்றாக கருத முடியாது. ஆட்சியாளர்களின் ஆதரவுடன், அரசு இயந்திரத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்ட கொலைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.
மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர்களாக பணியாற்றும் இரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வரை அனைவரின் ஆதரவும் கள்ளச்சாராய வணிகர்களுக்கு இருந்திருக்கிறது.
மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகியவற்றுக்கு நன்கு தெரிந்தே தான் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இதுகுறித்து தான் முதலில் விசாரணைதொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இவை அனைத்தையும் மறைத்து விட்டு, கருணாபுரம் சுடுகாட்டில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாக அப்பட்டமான பொய்யுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது விசாரணையின் அடிப்படையையே தகர்த்துவிடும்.
கள்ளச்சாராய இறப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜடாவத் தவறான தகவலை கூறியது ஏன், அவ்வாறு கூற அவரை கட்டாயப்படுத்தியது யார் என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும். அதற்காக ஜடாவத்திடம் விசாரணை நடத்த வேண்டும். அவரை இந்த வழக்கின் சாட்சியாக சேர்க்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விசாரணையை சிபிஐ-யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்