“பிரச்சினையில் இருந்து ஓடி ஒளிபவனல்ல நான்” - கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்


சென்னை: ‘தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் எந்தப் பிரச்சினையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான்’ என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துயரம் மிகுந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றிய தகவல் எனக்குத் தெரிந்ததும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக, சிகிச்சை பெற்று வருவோருக்கு உதவி செய்ய உத்தரவிட்டேன்.

முதல்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி, ஆய்வாளர், திருக்கோவிலூர் மதுவிலக்குப்பிரிவு ஆய்வாளர், எஸ்ஐ, திருக்கோவிலூர் டிஎஸ்பி, சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர், எஸ்.ஐ, எழுத்தர், சிறப்பு எஸ்.ஐ, ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி, எஸ்.பி. ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம்குறித்து தீர விசாரிக்க, உடனடியாக சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு, ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற இதேபோன்ற சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் விழுப்புரம் வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்டு, 8 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். காவல் துறையினர் 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 6 வழக்கு பதியப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். 6 காவல்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது.

குறிப்பாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க, மாவட்ட காவல் துறையுடன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் வருவாய் துறையினரால் அடிக்கடி சிறப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதுவரை, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது 4,63,710 வழக்குகள் பதியப்பட்டு, 4,61,084 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 565 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் உள்ளனர். 16,51,633 லிட்டர் கள்ளச்சாராயம், 1,42,019 லிட்டர் எரிசாராயம்,28,79,605 லிட்டர் ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்துமெத்தனால் உற்பத்தி அலகுகள்,பயனர்கள், மெத்தனால் வைத்திருத்தல், பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தொழிற்சாலைகளை தணிக்கை செய்ய மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘நடைபெற்ற சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்’ என்று இங்கு பேசினர். உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல; தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் எந்தப் பிரச்சினையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதில் சொல்கிறேன். குற்றவாளிகளைக் கைது செய்து விட்டுத்தான் உங்களுக்கு பதில் அளித்திருக்கிறேன். இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன். அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை வைத்து அரசியல் பேச விரும்பவில்லை. துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்.

இவ்வாறு பேசினார்