"சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என்பதற்காக கட்சியில் உள்ள இரண்டு பேர், நான்கு பேர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்செந்தூரில் மார்ச் 4-ம் தேதி சசிகலாவை சந்தித்ததால் அதிமுகவில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நீக்கப்பட்டார். இந்நிலையில் தஞ்சாவூரில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் 4-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் ஓ.ராஜா கலந்து கொண்டார். இதுகுறித்து அவரிடம் இன்று பேசினோம்.
தஞ்சாவூரில் சசிகலாவை சந்தித்து நேற்று என்ன பேசினீர்கள்?
நடராஜன் நினைவு நாளில் பங்கேற்கத்தான் அங்கு போனேன். மாலையைப் போட்டு, பூவைப் போட்டுட்டு வந்து விட்டேன். சசிகலாவிடம் ஒன்றும் பேசவில்லை.
அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பின் என்ன செய்கிறீர்கள்?
அவங்க யாருங்க என்ன கட்சியை விட்டு நீக்குவதற்கு? சசிகலாவை பொதுச்செயலாளர்னு நான் சொல்றேன். இல்லைனு அவங்க சொல்றாங்க. கோர்ட் சொல்லிருச்சா? அது சொல்லட்டும் அப்புறம் பார்ப்போம்!
அதிமுகவில் சேருவதற்கு சசிகலா முயற்சி செய்து கொண்டேயிருக்கிறார். ஆனால், அவரை மீண்டும் அதிமுகவில் சேர விடாமல் தடுப்பது பாஜகவினரா? அதிமுகவினரா?
அதிமுகவில் உள்ள இரண்டு பேர், நாலு பேர் தான் தடுக்கிறாங்க.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் இப்பிரச்சினை சரியாகி விடுமா?
அதிமுகவில் வார்டு தேர்தலில் நிற்கக்கூட இப்போது ஆளில்லை. இந்த முறை கைக்காசைப் போட்டு நிற்க வைச்சோம். அடுத்தமுறை நிற்க யார் இருக்க? தேனியில் 6 நகராட்சியில் அதிமுக ஒன்றில் கூட ஜெயிக்க முடியவில்லை. எங்களுக்குள் இப்படி சண்டை போட்டுக்கிட்டிருந்தால் எதிரிக்குத்தானே கொண்டாட்டம்? நாலு மாடுகள் பிரிந்தால் புலி அடிக்கும். சேர்ந்திருந்தால் புலி அடிக்காது என்பது சின்னப்பிள்ளைகளுக்கே தெரிகிறது. அதிமுகவில் இருப்பவர்களுக்குத் தான் தெரியவில்லை.
சசிகலா அதிமுகவில் முடிந்து போன அஸ்தமனம் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் என கோவை சத்யன் சொல்லியிருக்கிறாரே?
அவர் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் தானே? அங்கு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஏன் தோற்றுப்போனது? அப்படியென்றால் கொங்கு மண்டலத்தில் உள்ள அதிமுவினரை விட செந்தில்பாலாஜி பெரிய ஆளுனு கோவை சத்யன் ஒத்துக்கிறாரா? அதிமுக பலமாக இருக்க எல்லோரும் ஒண்ணா இருக்கணும்தான் சொல்றோம். ஆனால், இவரைப்போன்றவங்க இப்படி பேசினால் அப்புறம் அதிமுக எப்படி பலமாகும்?