கள்ளச் சாராயத்தை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகம்: கண்டன அறிக்கை வெளியிட்டார் நடிகர் சூர்யா


சென்னை: கள்ளச் சாராயத்தை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது என்பது பேரிடர் காலத்தில் கூட நடக்காததுயரமாகும். மேலும் இதில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதும் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கின்றன.

அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைகுறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளித்தாலும், நீண்டகால பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வு நிச்சயம் பலனளிக்காது.

இதேபோல கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தபோது தீவிர நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதி அளித்தது. ஆனால் இப்போது அதன் பக்கத்துமாவட்டத்திலே கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி நம்மை ஆட்சிபுரிந்த அரசுகளே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கும் அவலத்தை தொடர்ந்து பார்த்து வருகிறோம். மதுவிலக்கு கொள்கை தேர்தல் நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது. குடிக்கு அடிமையானவர்களின் பிரச்சினை என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினை.

அரசே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது பல ஆண்டுகளாக நடத்திவரும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்களை மீட்க மாவட்டங்களில் மறுவாழ்வு மையங்களை தொடங்கி, மறுவாழ்வு திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாக செயல்படுத்த வேண்டும்.

குறுகிய கால தீர்வை கடந்து தமிழக முதல்வர் மதுவிலக்கு கொள்கையில் மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை எடுப்பார் எனநம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். சட்டவிரோதமாக விற்பனைசெய்யப்படும் கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம். இனி ஒரு விதி செய்வோம். அதை எந்நாளும் காப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

x