கைவிடப்பட்ட 700 கோடி ரூபாய் தடுப்பணைத் திட்டம்: கரூர், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி


மோகனூர்- நெரூர் இடையே ரூ.700 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட தடுப்பணை திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது நாமக்கல், கரூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வழியாக காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. ஆற்றுப் பாசனத்தை மையப்படுத்தி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயப் பயன்பாட்டுக்காக மோகனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டுமென பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன்பலனாக, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஒருவந்தூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. எனினும், முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூ. 700 கோடி மதிப்பில் மோகனூர் - நெரூர் இடையே தடுப்பணைக் கட்டப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது நாமக்கல் - கரூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இத்திட்டம் கைவிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது நாமக்கல், கரூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மோகனூரைச் சேர்ந்த விவசாய முன்னேற்றக் கழகத் தலைவர் செல்ல. ராசாமணி, ‘காமதேனு’ இணையதளத்திடம் பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா ஒருவந்தூர் கிராமத்திற்கும் - கரூர் மாவட்டம் நெரூருக்கும் இடையே காவிரியில் 138 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை அமைப்பது குறித்து ஆய்வுப் பணிக்காக 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், அத்திட்டத்தை மாற்றியமைத்து மோகனூருக்கும் - நெரூருக்கும் இடையே 700 கோடி ரூபாய் செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஓராண்டாகியும் இதை நிறைவேற்ற எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இச்சூழலில் பொதுமக்களுக்கு இத்தடுப்பணையால் பயனில்லை என நிதித் துறை பரிந்துரை செய்ததன் பேரில் இத்திட்டம் கைவிடப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது விவசாயிகளிடையே பேரதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

விவசாய முன்னேற்றக் கழகத் தலைவர் செல்ல. ராசாமணி

மேலும், “ஆற்றில் தடுப்பணை அமைப்பது என்பதன் நோக்கமே, மழைக் காலங்களில் கடலில் லட்சக்கணக்கான கனஅடி ஆற்றுநீர் வீணாகக் கடலில் கலப்பதை, ஆங்காங்கே தடுத்து நிறுத்தி தேவைப்படும்போது அதை விவசாயத்திற்கும், கிராம நகர மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த வழிசெய்வதுதான். மேலும் தடுப்பணை அமையும் இடத்தைச் சுற்றிலும் பல கிலோமீட்டர் பரப்பளவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அனைவருக்கும் பயனளிக்கும்.

இத்திட்டத்தை அறிவிப்பதற்கு முன் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தடுப்பணை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தத் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்துவிட்டு, இப்பொழுது அதே திட்டத்தை, சென்ற ஆட்சி பொறுப்பில் இருந்த அரசு, மக்களுக்குப் பயனற்ற திட்டத்தை வகுத்துள்ளதாகவும் இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறி இத்திட்டம் கைவிடப்படுவதாகச் சொல்வது ஏற்புடையது இல்லை.

இந்த அறிவிப்பு உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்கப்படவில்லை. இருவேறு கட்சிகளின் பூசல்களுக்கு அப்பாற்பட்டு அரசு செயல் பட வேண்டும். முந்தைய அரசு அறிவித்த திட்டத்தை நடப்பு அரசு கைவிட வேண்டும் என்ற தவறான அணுகுமுறை அப்பாவி மக்களையும், விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும்.

எனவே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட, இந்தத் தடுப்பணையை அமைப்பதற்கு தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மோகனூர், காட்டுப்புத்தூர், தொட்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்களையும், அதனை நம்பியுள்ள விவசாயிகளையும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களையும் காக்க முடியும். இத்திட்டத்தை செயல்படுத்த முதல்வருக்கு மனுவும் அனுப்பப்பட்டுள்ளது” என்றார் ராசாமணி.

x