முதல்வரை புகழ்ந்த திமுக கவுன்சிலர்களை கண்டித்து சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுகவினர் வெளிநடப்பு


சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலர்கள். | படம்:எஸ்.குரு பிரசாத்

சேலம்: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த துயரமான நிலையில், சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக முதல்வரை புகழ்ந்து பேசிய திமுக கவுன்சிலர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் முன்னிலை வகித்தார். துணை மேயர் சாரதா தேவி, மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தின்போது, விசிக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்கள், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மக்களுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினர். இதனைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் கிரிஜா பேசுகையில், “மக்களவை தேர்தலில் 40 இடங்களில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி” என்றார்.

இதேபோல், திமுக கவுன்சிலர் ஈசன் இளங்கோ பேசுகையில், “மக்களவை தேர்தலில் 40 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் அர்ப்பணிப்பும், மக்களுக்கான பல நலத் திட்டங்களை வகுத்ததும் தான் காரணம்” என்றார். இதனையடுத்து, அதிமுக-வைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் யாதவ மூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள், மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி கூறும் போது, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த துயரமான நேரத்தில், சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், தேர்தல் வெற்றி குறித்து முதல்வரை புகழ்பாடி திமுக கவுன்சிலர்கள் பேசி வருவதை கண்டித்து, அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது” என்றார்.

x