தமிழக அரசின் கூடுதல் நிவாரணம் + கள்ளக்குறிச்சி அப்டேட்ஸ் |  டாப் 10 விரைவுச் செய்திகள்


> “கள்ளக்குறிச்சி துயரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்”: "துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்" என்று கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். ர்.

இதனிடையே, “கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு, எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

> கூடுதல் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்: “கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார்.

அதன்படி, “பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5,000 வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

> கள்ளச் சாராய உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

> அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கிய அதிமுகவினர் வெள்ளிக்கிழமை கறுப்புசட்டையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானத்தின் மீது கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை கண்டித்து பாமக, பாஜக கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

> கள்ளச் சாராய சம்பவம்: இபிஎஸ் கொந்தளிப்பு பேட்டி: சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், இது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். நெஞ்சை பதறவைக்கக்கூடிய, மக்களை கொதிப்படைய வைத்துள்ள இந்த துயர சம்பவம் குறித்துக் கூட சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் சட்டமன்ற உறுப்பினரானதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

அவ்வப்போது, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக செய்திகள் வருகின்றன. இருந்தும் இந்த துயர சம்பவம் எப்படி நடந்தது? இது ஒரு திறமையற்ற அரசாங்கம், பொம்மை முதல்வர். கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில்தான் கள்ளச்சாராயம் விற்கப்பட்டது. கள்ளச்சாராயம் விற்கப்பட்ட இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில்தான் காவல் நிலையம் உள்ளது. நீதிமன்றமும் அங்குதான் உள்ளது. உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். அதுதான் நியாயம்.

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நான் நேரில் சென்றேன். அந்த மருத்துவமனையை அதிமுக ஆட்சிக் காலத்தின்போது பிரம்மாண்டமாக கட்டிக்கொடுத்தோம். ஆனால், அங்கு தற்போது போதிய மருத்துவர்கள் இல்லை; மருந்துகளும் இல்லை.

அதிமுக ஆட்சியின்போது தூத்துக்குடியில் 2 பேர் காவல்நிலையத்தில் இறந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். எனவே, இந்த விஷயத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும். அதற்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சிபிசிஐடி விசாரணை சரியாக நடக்காது. தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் சரியாக செயல்படுமா? மக்களுக்கு நீதி கிடைக்குமா? உண்மை வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று பழனிசாமி தெரிவித்தார்.

> கள்ளச் சாராய விற்பனை: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி: கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக அரசுக்கு புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கள்ளக்குறிச்சி, மரக்காணம் கள்ளச் சாராய பலிகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜூன் 26-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

> ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் உறுதி: “மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தேன். அதேபோன்று கிராமத்தில் இருப்பவர்களையும் சந்தித்துப் பேசினேன். ஆணையம் எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத கால அவகாசம் இருப்பதால், அதற்குள் முழுமையான அறிக்கையை தாக்கல் செய்வோம்” என்று கள்ளக்குறிச்சியில் விசாரணை நடத்திய பின் ஒருநபர் ஆணையத் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கூறியுள்ளார்.

> கேஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைத்தது ஐகோர்ட்: மதுபான கொள்கை முறைகேடு தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை, டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. அதேநேரத்தில், இந்த வழக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அதன் முடிவில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

> நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

> மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற தடை நீட்டிப்பு: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மின்சாரம், குடிநீர் வசதிகளை தொடர்ந்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

x