பாஜக விரித்த வலையில் விழுந்த `ஜி - 23' தலைவர்கள்


ராகுலுடன் கோபண்ணா

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. இதையொட்டி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் சோனியாகாந்தி இடைக்கால தலைவராக தொடர்வார் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதை ஏற்காத காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களைக் கொண்ட' ஜி - 23' குழு தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. ' சோனியா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு வரக்கூடாது' என்று அக்குழு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சோனியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் காங்கிரஸை உடைப்பதற்காக வேலையில் அந்தக்குழு இறங்கியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியினரால் குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.கோபண்ணாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

காங்கிரஸ் கட்சிக்குள் இப்போது என்ன தான் நடக்கிறது ?

'ஜி- 23' என்று சொல்லப்படுபவர்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள். தேர்தலுக்கு முன்பு வரை சோனியாகாந்தி தான் கட்சி தலைமை பதவியில் நீடிக்க வேண்டும் என்று சொன்னவர்கள், தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கிறார்கள். ஒரு தலைமையை வெற்றி, தோல்விகளால் நிர்ணயம் செய்யக்கூடாது. அப்படி செய்ய நினைப்பவர்களால் தான் இப்போது பிரச்சினையே.

சோனியாவை இவர்கள் எதிர்க்க காரணம் என்ன?

இந்திராகாந்தி படுகொலைக்குப் பின் அரசியலுக்குக் போக வேண்டாம் என்று ராஜீவ்காந்தி காலில் விழுந்து சோனியா கெஞ்சினார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கோரிக்கையை ஏற்று கட்சி தலைமைப்பதவிக்கு ராஜீவ் வந்தார். இந்த நாட்டிற்காக தனது உயிரையும் தந்தார். இதன் பின் காங்கிரஸ் ஆட்சி பலமுறை நடைபெற்றுள்ளது. இதனால் சோனியாகாந்தி குடும்பம் அடைந்த பலன் என்ன? பிரதமராக வந்த வாய்ப்பை ஏற்க மறுத்து, மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய தியாகத்தலைவி தான் சோனியாகாந்தி. காந்தி, நேரு சித்தாந்தத்திற்கு எதிரான ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை முறியடிக்கத்தான் அவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். சோனியா, ராகுலை தவிர வேறு மக்களுக்குத் தெரிந்த தலைவர்களை 'ஜி - 23' தலைவர்களால் சொல்ல முடியுமா? காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் 54 உறுப்பினர்கள் கலந்து கொண்டு சோனியாகாந்தி தலைவராக வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், உள்ளே ஆதரித்து விட்டு வெளியே வந்து 'ஜி- 23' தலைவர்கள் எதிர்க்கிறார்கள். பாஜக விரித்த வலையில் அவர்கள் விழுந்துள்ளனர். காங்கிரஸை விமர்சனம் செய்வதன் மூலம் பாஜகவிற்கு அவர் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருகிறதே?

காங்கிரஸ் கட்சி 19 சதவீத வாக்குகளை மட்டும் தான் தற்போது பெற்றுள்ளது உண்மை . 1951-ம் ஆண்டு ஜனசங்கமாக உதயமாகி 1987-ம் ஆண்டு அது பாஜகவாக உருவெடுத்த போது பெற்ற வெற்றி 3 எம்பிக்கள் தான். தற்போது 303 எம்பிகள் பாஜகவில் உள்ளனர். ஆனால் 1984-ம் ஆண்டிலேயே காங்கிரஸில் 414 எம்பிக்கள் இருந்தனர். மதச்சார்பின்மையின் மீதும், மக்கள் ஒற்றுமையின் மீதும் நம்பிக்கை கொண்டது காங்கிரஸ் கட்சி. அது நேர்மையான முறையில் மக்களைத் தேர்தலில் சந்திக்கிறது. ஆனால், மக்களை சாதியாகவும், மதமாகவும் பிரித்து வாக்கு வங்கிகளை பாஜக அறுவடை செய்து வருகிறது. அத்துடன் பொய்களை மட்டுமே வாக்குறுதிகளாக கொடுத்து வெற்றி பெற்று வருகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி பல அற்புதங்களை நிகழ்த்துவார்.

பாஜக கொடுக்கும் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்களா?

இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் கொண்டாடுகின்றனர். இப்படத்தின் கதை 1990-ம் ஆண்டு இஸ்லாமியர்களால் காஷ்மீர் பண்டிட்டுகள் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளானார்கள் என்கிறது. இந்த சம்பவத்திற்கு காரணம் காங்கிரஸ் கட்சி என்பது போன்ற சித்திரத்தை பாஜக வரைய நினைக்கிறது. அதற்காக இந்த திரைப்படத்தைத் தூக்கிச் சுமக்கிறது. அந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் 1990-ம் ஆண்டு பாஜக ஆதரவோடு பிரதமராக இருந்தவர் வி.பி.சிங். அப்போது நடைபெற்ற சம்பவத்தை மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைத்து இன்று பாஜக பொய் பிரச்சாரம் மக்களிடையே செய்து வருகிறது. நேருவே காஷ்மீர் பண்டிட் தான். ராஜீவ், ராகுல் எல்லோரும் காஷ்மீர் பண்டிட்டுகள் தான். இப்போது அந்த படத்தை மோடி கொண்டாடுவதன் அர்த்தம், மக்களை மதத்தின் பேரால் பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவது தான்.

காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெறும் என நம்புகிறீர்களா?

காங்கிரஸ் கட்சி கட்டாயம் பலமடையும். ஏனெனில் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சி அது. எனவே, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இந்தியா முழுவதும் உள்ள மாநில கமிட்டிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். திமுகவில் ஸ்டாலினுக்கு உள்ள அதிகாரம் போல கே.எஸ்.அழகிரிக்கும் காங்கிரஸில் வழங்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் கட்சி வளரும். மத்தியில் உள்ள அதிகாரக் குவியலை மாநில அளவில் பரவலாக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுப்பதன் மூலம் தேசம் முழுவதும் கட்சி பலப்படும்.

x