திருவள்ளூர்: பள்ளிப்பட்டு சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளிப்பட்டு சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய இடைத்தரகர்கள் உதவியுடன் அலுவலக பணியாளர்கள் லஞ்சம் பெற்றுவருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி-யான ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழரசி உள்ளிட்டோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சார் பதிவாளர் (பொறுப்பு) மோகன்ராஜ், பத்திரப்பதிவு எழுத்தர் ஒருவருக்குச் சொந்தமான காரில் பள்ளிப்பட்டில் இருந்து, சோளிங்கர் சாலை வழியாக திருவள்ளூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, குமாரராஜபேட்டை பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அந்தக் காரை மடக்கினர். அதனைத் தொடர்ந்து மோகன்ராஜை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 12 மணிவரை நடைபெற்ற விசாரணை மற்றும் ஆய்வில், கணக்கில் வராத ரூ.11 லட்சம் பணம் காரில் மோகன்ராஜ் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் அருகே கீழ்நல்லாத்தூர் பகுதியில் உள்ள சார் பதிவாளர் ( பொறுப்பு) மோகன்ராஜ் வீட்டில் இன்று காலை 7 மணிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

x