ரயில் முன்பதிவில் சம்ஸ்கிருதம் சொல்லை மாற்றவும்: திமுக எம்.பி செந்தில்குமார்


``ரயில்பயணத்திற்கான முன்பதிவில் மாற்றுத்திறனாளிகளை ‘திவ்யாங்’ எனும் சம்ஸ்கிருதச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இதை, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மாற்றி எழுத வேண்டும்'' என திமுக எம்பி டாக்டர் டி.என்.வி.செந்தில்குமார் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.

மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் தருமபுரி தொகுதி திமுக எம்.பியான செந்தில்குமார் பேசுகையில், ‘நமது இந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி முன்பதிவு இணைத்தில் ’திவ்யாங்’ என்ற ஒரு வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த சொல்லானது, ஐஆர்சிடிசியில் மாற்றுத்திறனாளிகளை குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ’திவ்யா’ என்ற இந்த சொல் சம்ஸ்கிருத மொழியைச் சேர்ந்தது. இந்த சம்ஸ்கிருத மொழியை வெறும் 14,000 மக்கள் மட்டுமே பேச்சு வழக்கில் பயன்படுத்துகின்றனர்.

வெறும் சொர்ப்ப மக்கள் மட்டுமே பேசும் இந்த சம்ஸ்கிருதத்தை மத்திய ரயில் துறையில் பயன்படுத்துவது சரியா? என்று நான் அரசிடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். மக்களவை சபாநாயகர் மூலமாக நான் ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். என்னவெனில், மத்திய ரயில்துறையினரிடம் இந்த பிரச்சினையை எடுத்துக்கூறி திவ்யாங் என்ற சம்ஸ்கிருதச் சொல்லை, மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சொல்லை, ஆங்கில சொல்லான ’Physically Challenged’ எனவும் அல்லது அரசியலமைப்பின் அட்டவணைப் பட்டியலில் இடம்பெற்ற தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் மாற்றியமைக்கப்பட வேண்டுகிறேன்" என வலியுறுத்தினார்.

x