தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை: தீயணைப்புத் துறை விழிப்புணர்வு ஒத்திகை @ கரூர்


விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

கரூர்: தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து மாநில பேரிடர் மேலாண்மைக் குழு சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (ஜூன் 21) நடைபெற்றது.

தமிழ் நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளின் போது பொதுமக்கள் தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு சார்பில் கரூர் அருகேயுளள பெரிய ஆண்டாங்கோவில் அமராவதி ஆறு தடுப்பணையில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (ஜூன் 21) நடைபெற்றது.

கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய உதவி தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நடத்திய இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மழையின் காரணமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும்போது நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றில் சிக்கிக் கொண்டால் தங்களுக்கு கிடைக்கும் பிளாஸ்டிக் கேன்கள், காற்று அடிக்கப்பட்ட டியூப் உள்ளிட்டவற்றை வைத்து எப்படி பாதுகாத்து இளைப்பாறிக் கொள்வது என்பது குறித்தும் ஆற்றில் நீச்சல் தெரியாமல் சிக்கிக்கொண்டவர்களை படகு மூலம் மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளிப்பது எப்படி என்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.

x