குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது?#TNBudget2022


தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என்பதாகும். இன்று நடைபெற்ற தமிழ்நாடு பட்ஜெட் 2022-23-ல் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பட்ஜெட் தாக்கலின்போது, “மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்காக, தகுதி வாய்ந்த பயனாளிகளைக் கண்டறியும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நிதிச்சுமை காரணமாக, இதை அரசின் முதலாண்டில் செயல்படுத்த முடியவில்லை. நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

ஆறுதல் தரும் விதமாக, மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி ’மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்’ என மாற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளியில் படிக்கும் பெண்கள் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க மாதம் ரூ.1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலைத் தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மற்றபடி மகளிருக்கு இலவச பயணத்திட்டத்தால் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்காக ரூ.1520 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. 100நாள் வேலைத்திட்டத்தால் அதிகம் பலனடைவது மகளிர் என்ற அடிப்படையில் அதற்கென ரூ.2800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் பெண்களுக்கான முக்கிய அறிவிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

x