தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்துவருகிறார். இதில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அறிவிப்புகளை செய்தார்.
கடந்த இரண்டாண்டுகளாக கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்ய தமிழக அரசு ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை 38 மாவட்டங்களில் தொடங்கியது. இதன் மூலம் 30 லட்சம் மாணவர்கள் பலனடைந்துள்ளனர். 2022-23-ம் நிதியாண்டிலும் இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ”உயர்கல்வியில் ’ஸ்டெம்’ படிப்புகள் என்றழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் ஆகிய துறைகளில் படித்து மாணவர்கள் முன்னேற நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதில் முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் ’மாதிரி பள்ளிகள்’ (Model School)ஆக மேம்படுத்தப்பட்டன. வரும் நிதியாண்டில் மேலும் 15 மாவட்டங்களின் அரசுப் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாகத் தகவமைக்கப்படும். இதற்கென ரூ. 125 கோடி ஒதுக்கப்படும்.
அனைத்து அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடி நலப் பள்ளிகள், சீர்மரபினர் பள்ளிகள் ஆகியவற்றை மேம்படுத்த ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ அமல்படுத்தப்படும். அரசு தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் அறையுடன்கூட வளர்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கென அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரூ. 7000 கோடி ஒதுக்கப்படும்.”
இவ்வாறு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.