``சிவகாசி பட்டாசு தொழிலைப் பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்று 8 லட்சம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் பட்டாசு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள சீனாவிற்கு அடுத்தபடியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அந்த இடத்தைப் பிடித்துள்ளது. 'குட்டி ஜப்பான்' என்று அழைக்கப்படும் சிவகாசியில் 1070 அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகள் உள்ளன. இவற்றின் மூலம் நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்களும் வேலை பெறுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்து வந்தன.
இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு உற்பத்தி நடந்து வந்தது. ஆனால், உச்சநீதிமன்ற வழக்கு, நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை உள்ளிட்டவற்றால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சிவகாசியில் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தொழிலை நம்பியுள்ள 8 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ள 1.50 கோடி பேரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பட்டாசு ஆலைகளில் பேரியம் நைட்ரேட்டிற்கு (பச்சை உப்பு) பதில் சிவப்பு உப்பை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிக்கலை ஏற்படுத்தி வருவதாக தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்கக்கோரியும், சரவெடி, பேட்ரியம் நைட்ரேட் தடையை நீக்க வலியுறுத்தியும் மார்ச் 21-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக பட்டாசு தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) விருதுநகர் மாவட்ட செயலாளர் தேவாவிடம் கேட்டதற்கு, "இப்போராட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ரியம் நைட்ரேட் பயன்படுத்தினால் தான் 70 சதவீத வெடியே தயாரிக்க முடியும். எனவே, பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தி தான், பட்டாசு தயாரிக்க முடியும் என்று தமிழக அரசு தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் 8 லட்சம் தொழிலாளர்களை தமிழக அரசால் பாதுகாக்க முடியும். முதல்வர் ஸ்டாலின், இந்த கோரிக்கையை ஏற்பார் என்று நம்புகிறோம்" என கூறினார்.