காஸ் சிலிண்டர்களில் கசிவு ஏற்படுவதைக் கண்டறிய சோதனைக் கருவி அறிமுகம்


சென்னை: வீடுகளில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் காஸ் கசிவை கண்டறிவதற்காக சோதனைக் கருவிகளை ஊழியர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கி உள்ளது.

தமிழகத்தில் 1.32 கோடி வீட்டு சமையல் எரிவாயு இணைப்புகள், பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு உள்ளது. வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

சில சிலிண்டர்களில் ரெகுலேட்டரை இணைக்கக் கூடிய இடத்தில் உள்ள வாஷர், வால்வு சரியாக பொருத்தப்படாத நிலையில் காஸ் கசிவு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, சிலிண்டர் விநியோகம் செய்யும் போது வாஷர், வால்வு சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து தருமாறு ஊழியர்களை எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. அவர்களும் கையால் பரிசோதிக்கின்றனர். ஆனால், அதில் துல்லியமாக காஸ் கசிவு ஏற்படுவதை கண்டறிய முடியவதில்லை.

இந்நிலையில், வாஷர், வால்வு சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க 2 சோதனை கருவிகளை ஊழியர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கி உள்ளது. இதன்படி, வால்வு லீக் டெஸ்டர் என்ற கருவியை சிலிண்டரில் ரெகுலேட்டர் இணைக்கும் இடத்தில் பொருத்த வேண்டும். 'வால்வு பின்' சரியாக பொருத்தாமல் இருந்தால் கருவியில் உள்ள முள் நகர்ந்து வரும்.

இதேபோல், ரிங் லீக் டிடெக்டர் கருவியை சிலிண்டர் மேல் பொருத்த வேண்டும். வாஷர் சரியாக இல்லை எனில் முள் நகர்ந்து வரும். வாஷரும், வால்வும் நல்ல நிலையில் இருந்தால் முள் நகர்ந்து வராது. இக்கருவிகளை பயன்படுத்தி ஒவ்வொரு வீட்டிலும் சிலிண்டர் விநியோகம் செய்யும் போது சோதனை கருவிகளை பயன்படுத்தி காஸ் கசிவு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

x