மீண்டும் உடைகிறதா காங்கிரஸ்?


நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தோல்விகளும், இடைக்கால தலைவரான சோனியாகாந்தி நியமனமும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது. இதன் காரணமாக அக்கட்சி மீண்டும் உடையும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சமீபத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பஞ்சாபில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. இத்தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட ஐந்து மாநில காங்கிரஸ் தலைவர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இத்தோல்விகளில் மீண்டெழ ஆலோசனையில் ஈடுபடுவதற்குப் பதில், தேசிய அளவில் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற விவாதம்தான் பல வருடங்களாக அக்கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு ராகுல்காந்தி வரவேண்டும் என்று அகில இந்திய, மாநில தலைவர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் வேட்பாளருக்கு அவர் தான் பொருத்தமானவர், மோடிக்கு நிகரானவர் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு சுட்டிக்காட்டிக் கொண்டேயிருக்கின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அன்றைய நாள் வரை, ராகுல்காந்தியை தலைவராக்க வேண்டும் என்ற குரல்கள் எதிரொலிப்பு நின்ற பாடில்லை. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வலிமையான தலைவர்கள் எப்போதும் தோல்விகளால் துவண்டு போவதில்லை. மாறாக களத்தில் நின்று போராடி, வரலாற்றை மாற்றி எழுதுவார்கள். இது அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுத் தருணத்தின் துவக்கமாகவும் இருக்கலாம். அந்த துணிச்சல் தலைவர் ராகுல்காந்திக்கு உண்டு. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு. தொடர்ந்து உறுதியோடு செயல்படுவோம். வெல்வோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அன்று நடந்தது வேறு. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்று காரிய கமிட்டியில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து சோனியா குடும்பத்தினர் விலக வேண்டும் என்று கபில் சிபில் உள்ளிட்ட பல தலைவர்கள் அன்றே எதிர்ப்பை தெரிவித்தனர். ஏற்கெனவே, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பிறகு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். அதில், ``காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் ஊட்டும் வகையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியிருந்தனர். ஆனால், தற்போது சோனியாவே கட்சித் தலைவரானது காங்கிரஸ் கட்சியில் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் மறுசீரமைப்பு கொண்டு வரவேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக குலாம்நபி ஆசாத் இல்லத்தில் இந்த தலைவர்கள் ஒன்று கூடி நேற்று விவாதித்துள்ளனர். அப்போது, ``காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்யவும், சோனியா குடும்பத்தினர் இல்லாத தலைமையை உருவாக்க வேண்டும்'' என்றும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில், கபில் சிபல், ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி, பூபிந்தர் ஹூடா, பிரிதிவிராஜ் சவான், ராஜ் பாபர், பி.ஜே.குரியன், மணிசங்கர் அய்யர், சசி தரூர் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து தெரிவிக்கையில், "கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கில் ஜி-23 தலைவர்கள் தனியாக சந்தித்து பேசி வருகின்றனர். இவர்கள் நூறு கூட்டங்கள் நடத்தினாலும் சோனியாகாந்தியை தனிமைப்படுத்த முடியாது" என்று கூறினார்.

இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் கபில்சிபில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி சாந்தினி சவுக் மாவட்ட காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதேபோல சோனியா தலைமையை எதிர்த்தால் சரத் பவார், பி. ஏ. சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இம்மூவரும் 1999, மே 25-ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினர். காங்கிரஸ் கட்சியில் இருந்து மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் வெளியேறி 60க்கும் மேற்பட்ட கட்சிகளை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாகத்தான், அக்கட்சி தனித்துவத்தை இழந்து நிற்கிறது. டெல்லியில் தற்போது நடக்கும் பூசல்கள் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம் கேட்டதற்கு, "தேசம் முழுவதும் பாஜக கையில் போகும் நிலையில் உள்ளது. இருக்கும் இடத்திலும் இல்லாத நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு வருகிறது. சோனியா குடும்பத்தினர் இல்லாத காங்கிரஸ் தலைமை என்பதை நினைத்துப் பார்க்க முடியாது. நாட்டிற்காக இரண்டு தலைவர்களை இழந்த குடும்பம் அது. அக்குடும்பத்தை விலக்கி வைத்து விட்டு இப்போது இந்தியாவில் எந்த தலைவரை காங்கிரஸ் கட்சிக்கு முகமாக காட்ட முடியும்? ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியில் முரண்டு பிடித்த பல தலைவர்கள், பாஜக பக்கம் சாய்ந்து விட்டனர். இன்னும் பலர் அந்த கட்சிக்கு எப்போது தாவுவது என சந்தர்ப்பம் பார்த்து வருகிறார்கள். தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல நேரங்களில் காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது. ஆனாலும், தேசிய அளவில் மக்களின் நம்பிக்கைக்கு உரிய கட்சி என்றால் அது காங்கிரஸ் தான்" என்று கூறினார்.

ஆனால், தேசிய அளவில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸின் வாக்கு வங்கி பலம் 19 சதவீதமாக தான் உள்ளது. ஆனால், பாஜகவின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 31 சதவீதம் தான். ஆனால், 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் அது 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிய காங்கிரஸ், பிராந்திய கட்சிகளுடன் நல்லுறவை வைத்து மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கான வேலையைப் பார்ப்பதற்குப் பதில், தலைமை பொறுப்பிற்கான போரில் சிக்குண்டு கிடக்கிறது என்று பாஜகவினர் கூறுகின்றனர்.

இந்நிலையில்தான், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணியை தேசிய அளவில் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கிழக்கில் மம்தா பானர்ஜி, தெற்கில் சந்திரசேகரராவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மதச்சார்பற்ற கட்சிகள் தலைமையில் தமிழகத்திலும் அப்படியான முயற்சியில் முதல்வர் ஸ்டாலினும் ஈடுபட்டுள்ளார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மாநில அளவில் கட்சிகள் பெரிய அளவு வெற்றிபெற்றாலும், 19 சதவீத வாக்குகள் கொண்ட காங்கிரஸ் கட்சியை உதாசீனப்படுத்தி ஆட்சியமைக்க முடியாது. ஆனால், அதுவரை காங்கிரஸ் கட்சி உடையாமல் இருக்க வேண்டுமே?

x