கள்ளச் சாராய பலி அதிகரிப்பு முதல் அதிமுகவினரின் வெளியேற்றம் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> கள்ளச் சாராய பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

> சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர்.

> “விவாதத்தில் அதிமுக பங்கேற்க அனுமதிக்கவும்” - முதல்வர்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஒருநாள் அவர்களை சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு தடை விதித்தார். இந்தநிலையில், “எதிர்க்கட்சி உறுப்பினர்களை மீண்டும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று அதிமுகவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிமுக அதனைப் புறக்கணித்துவிட்டனர்.

> கள்ளச் சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை -இபிஎஸ்: சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 16 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனையெல்லாம் சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டோம். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.

இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்ந்த பின்னும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது வேதனையைத் தருகிறது. அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் இருவர் கொல்லப்பட்டதாக கூறி அந்த வழக்கில் அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரினார். அதேபோல் கள்ளச் சாராய மரணங்களை சிபிஐ விசாரணை விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே கள்ளச் சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்த விசாரணையை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

> “பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்” - விஜய் உத்தரவு: தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

> கேஜ்ரிவாலின் ஜாமீனை இடைநிறுத்தி ஐகோர்ட் உத்தரவு: டெல்லி முதல்வர் அரிவிந்த் கேஜ்ரிவாலுக்கு பெரும் பின்னடைவாக விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, அந்த வழக்கில் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

> ஸ்ரீநகரில் யோகாசனம் செய்த பிரதமர் மோடி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடந்த 10-வது சர்வதேச யோகா தினக்கொண்டாட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கி, யோகாசன பயிற்சியில் ஈடுபட்டார். யோகா தின நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், "இந்த நாள் உலகில் ஒரு புதிய சாதனையை உருவக்கியுள்ளது. இந்த யோகா தினத்தில் உலகின் ஒவ்வொரு முலையிலும் யோகாவை பயிற்சி செய்பவர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலக அளவில் யோகாவை பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது." என்று தெரிவித்தார்.

> நீட் கவுன்சிலிங்கிற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு: இளங்கலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், நீட்- யுஜி 2024 கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. மேலும் தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் புதிய மனுக்களையும் இணைத்து குறியிட்ட உச்ச நீதிமன்றம் அவைகளை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

> 3 குற்றவியல் சட்டம் குறித்து பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்: ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இந்த ஒத்திவைப்பு குற்றவியல் சட்டங்களை புதிய மக்களவையின் மறுஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

> தண்ணீர் பிரச்சினைக்காக டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்: கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் தலைநகர் டெல்லி தவித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் அதிஷி, தெற்கு டெல்லி போகலில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். தினமும் 100 மில்லியன் கேலன் தண்ணீர் திறந்து விட ஹரியாணா அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது.

x