அதிமுகவில் சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்கும் விவகாரத்தை, கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால் பெரும் கஷ்டமாயிருக்குப்பா! சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வந்த பிறகு, அதிமுக தன் கைக்கு வரும் என சசிகலா கனவு கண்டார். ஆனால், இப்போது அதிமுகவிலாவது சேர்க்கமாட்டார்களா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது காலம் செய்த கோலம். பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் அளித்த வரவேற்பு முதலில் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. ஆனால், தமிழகத்திற்குள் வந்த சில நாட்களுக்குள் களநிலவரம் அது மெய்யல்ல என அவருக்கு உணர்த்தியது. தான் ஏற்றி விட்ட ஏணியே தான், தன்னை எட்டி உதைத்து வருகிறது என்ற உண்மையும் அவருக்குப் புரிய வந்தது.
``அதிமுக கொடி கட்டிய காரில் வெளியூர் செல்லும் சசிகலாவிற்கு அதிமுக கொடிகளோடு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இந்த ஏற்பாட்டை செய்வது அமமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது சசிகலாவிற்கு நன்றாகவே தெரியும். பிறகு ஏன் தன்னைத்தானே அவர் ஏமாற்றிக் கொள்கின்றார்?'' என்று அதிமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும், தன்னால் பலனடைந்த அதிமுக தலைவர்களுடன் சசிகலா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள், மீண்டும் அதிமுகவிற்குள் ரீ என்ட்ரியாகி விடுவோம் என்ற நம்பிக்கையை அவருக்குள் விதைத்தது.
ஆனால், ஆட்சி பறிபோனாலும், தேர்தலில் வெற்றி பெற்ற பெரும்பாலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என்பதால் அப்செட் ஆனார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த போதும், முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லாததால், சசிகலா மூலம் அந்த அதிகாரத்தை அடையலாம் என ஓ.பன்னீர்செல்வம் சில உள்ளடி வேலைகளைச் செய்தார் என்று தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், அந்த முயற்சி பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் தான் முடிந்தது.
``அதிமுகவில் சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும்'' என்று தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி நடைபெற்றது. அதனால் தன் பதவிக்கு ஆபத்து எதுவும் வந்து விடுமோ என்று அஞ்சிய ஓ.பன்னீர்செல்வம், உங்கள் கோரிக்கையை கட்சி தலைமைக்குத் தெரிவிக்கிறேன் என்று தீர்மான வடிவத்தை தீர்த்துக் கட்டினார். ஆனால், இந்த ராஜதந்திரம் தெரியாத அவரது தம்பி ராஜா, சசிகலாவைச் சந்தித்து கட்சி உறுப்பினர் பதவியை இழந்து நிற்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டம் குறித்த தகவலை எடப்பாடி பழனிசாமிக்கு முதலில் தெரிவித்தவரே ஓ.பன்னீர்செல்வமாகத்தான் இருக்கும் என்ற ஐயமும் ராஜா ஆதரவாளர்களுக்கு இருக்கிறது. குழப்பமான மனநிலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தால் அதிமுகவிற்குள் மீண்டும் செல்ல முடியாது என்பதை அறிந்ததால்தான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் ரீ என்ட்ரியாக சசிகலா முயற்சித்து வருகிறார். இதற்காக டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களுடன் அவர் பேசு்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதிமுகவில் மீண்டும் சேர வேண்டும் என்ற அவரது ஆசையை பாஜக தலைமையில் உள்ள தலைவர்கள் விரும்பினாலும், பிரதமர் மோடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ``தமிழகத்தில் அதிமுகவினர் நம்முடன் நல்ல உறவில் இருக்கிறார்கள். அதைக் கெடுப்பதற்கான வேலையை செய்ய வேண்டாம்'' என்று கட்சி தலைமைக்கு மோடி வலியுறுத்தியதாக சசிகலா வட்டாரம் கவலையோடு தெரிவிக்கிறது.
``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டாம்'' என்று மோடி 'ரெட்கார்டு' போட்டதாக கூறுகிறார்கள். கடைசி நேரத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரனை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி நினைத்தாலும், அதை பாஜக விரும்பாது என்றே கூறுகின்றனர். ஆனாலும், தனது விக்ரமாதித்ய முயற்சியை விடாமல் சசிகலா தொடர்ந்து கொண்டிருக்கிறார்.