முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி


கடல் போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி

கடலூர்: வீராணம் ஏரி அதன் முழுகொள்ளளவினை எட்டி முழுவதுமாக நிரம்பியதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், புவனகிரி வட்டப் பகுதிகளில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இதனால் அந்த வட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. மேட்டூர் நீர் கீழ் அணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். இந்த ஏரியிலிருந்து தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒன்றரை மாதமாக ஏரிக்கு நீர்வரத்து இல்லாததாலும் கடும் வெயில் காரணமாகவும் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டதாலும் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைப்பது நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பிடும் வகையில் தமிழக அரசு சிறப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதன்படி கடந்த மாதம் 17-ம் தேதி மேட்டூரில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த மாதம் 26-ம் தேதி கீழ் அணைக்கு வந்து சேர்ந்தது. அன்றே கீழ் அணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது இன்று (ஜூன்.21) ஏரியின் நீர்மட்டம் 47.50 எட்டியது.

கீழணையில் இருந்து ஏரிக்கு விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு விநாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஒன்பது அடி உள்ள கீழ் அணையில் 4.1 அடி வரை தண்ணீர் உள்ளது. ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவசாய பாசனத்திற்கும் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.