சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக திருச்சி சூர்யா, கல்யாணராமன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
மாநில அலுவலக செயலாளர் எம்.சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுமாநில தலைமை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார். இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி கல்யாணராமன் கட்சி பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் ஓராண்டுக்கு நீக்கப்படுகிறார்’ என கூறியுள்ளார்