`நாங்கள் அரிசி; தமிழக அரசு உமி'- சொல்கிறார் அண்ணாமலை


உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டது குறித்து பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ``நாங்கள் கொண்டு வருவது அரிசி. நீங்கள் கொண்டு வருவது உமி'' என்று விமர்சனம் செய்தார்.

நாமக்கல் அடுத்துள்ள கே.புதுப்பாளையம் கிராமத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குலதெய்வக் கோயிலான ஸ்ரீ பாமா ருக்மணி சமேத நந்த கோபால சுவாமி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக அரசை பல பெயர் சொல்லி அழைக்கிறார்கள். பத்து மாதம் கழித்து இந்த அரசுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால் அறிவிப்பு அரசு என்று கூற வேண்டும்.

மத்திய அரசு திட்டங்களை பெயர் மாற்றி அறிவிப்பு அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. உக்ரைன்- ரஷ்யா போரில் தமிழக மாணவர்கள் 1866 பேர் பிரதமரின் சீரிய முயற்சியால் மீட்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஒரு குழுவை அமைத்து இங்கிருந்து டெல்லி சென்று மூன்று நாள் தங்கிவிட்டு நாங்கள் தமிழக மாணவர்களை மீட்டெடுத்துள்ளோம் என்று அறிவிப்பு வெளியிடுகிறார்.

நாங்கள் கொண்டு வருவது அரிசி. நீங்கள் கொண்டு வருவது உமி. பிரதமர் தமிழக மாணவர்கள் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை" என்றார். பாஜக மூத்த நிர்வாகிகள் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x