சோனியா காந்தி நியமனத்திற்கு பாஜகவின் ரியாக்‌ஷன் என்ன?


டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம். (பைல் படம்)

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்வார் என்று எடுக்கப்பட்ட முடிவை, ' விநாச காலே விபரீத புத்தி' என பாஜக கிண்டலடித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றது. இதில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இந்த 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக யாரை நியமிப்பது என்று நான்கு மணி நேரமாக விவாதிக்கப்பட்டது. முடிவில், 'காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார்' என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஆர்.ஸ்ரீனிவாசன்

இதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசனிடம் கேட்டபோது, ``விநாச காலே விபரீத புத்தி என்பது இது தான். ஒரு குடும்பத்திற்குள்ளேயே கட்சியின் தலைமையைத் தேடுகிறார்கள். நேருவிற்குப் பிறகு இந்திரா காந்தி, அவருக்குப் பின் அவரது மகன் ராஜீவ்காந்தி வந்தார். இதன் பின் வந்த நரசிம்மராவ் ஆட்சி, வாரிசு அரசியல் இல்லாமல் இருந்தது. புதிய முயற்சிகளை துணிந்து எடுத்த மெச்சத்தகுந்த ஆட்சி அது 'என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ``பாஜகவில் வாரிசு அரசியல் இல்லாததால்தான், அதன் வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது. ராகுல்காந்தியிடம் கட்சி போனால், காங்கிரஸ் அழியும். ஒரு காலத்தில் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் முதல்வர்கள் இருந்தனர். தற்போது இரண்டு இடங்களில் தான் இருக்கின்றனர். தென் மாநிலமான புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியும் காணாமல் போய்விட்டது. தற்போது காங்கிரஸ் இல்லாத இந்தியாவாக மாறி வருகிறது. குடும்ப அரசியல், வாரிசு அரசியலில் இருந்து காங்கிரஸ் விலகினால் தான், அந்த கட்சிக்கு நல்லது'' என்று கூறினார்.

x