கேரளாவுக்கு எதிராக 5 மாவட்ட விவசாய சங்கம் அதிரடி அறிவிப்பு


அன்வர் பாலசிங்கம்.

தமிழக வாகனத்திற்கு தேக்கடியில் அனுமதி மறுத்ததால், கேரள அரசு வாகனங்களை குமுளியில் இன்று சிறைபிடிக்க ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்காக தேனி மாவட்டம், கம்பத்தில் விவசாயிகளைத் திரட்டிக் கொண்டிருந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம்.

கேரள அரசு மீது அப்படி என்ன கோபம்? என்று அவரிடம் கேட்டதற்கு, ``தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை விளையாட்டை கேரளா அரசு நிறுத்தவில்லை.

தேக்கடியில் உள்ள நமது பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பை மராமத்து செய்ய கம்பத்தில் இருந்து ஒரு வேனில் ஒரு தண்ணீர் தொட்டி, 3 ஆஸ்பெடாஸ் சீட்டுகள், 2 குழாய்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பை ஒட்டி கேரள அரசின் பெரியாறு புலிகள் காப்பக செக்போஸ்ட்டில் இந்த வாகனம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டது. இப்போது அந்த வேன் குமுளியில் நிற்கிறது. ஆனால், கேரள உளவுத்துறை அதிகாரி, 2 ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளுடன் நேற்று தமிழக படகில் தேக்கடி சென்றுள்ளார். நமது வாகனம் உள்ளே செல்லக்கூடாது. ஆனால், அவர்கள் மட்டும் தமிழக படகில் செல்லலாமா?' என அன்வர் பாலசிங்கம் கேள்வி எழுப்பினார்.

அங்குள்ள செக்போஸ்டால் என்ன பிரச்சினை என்று அவரிடம் கேட்டதற்கு, ' மாலை 6 மணியில் இருந்து காலை 6 மாலை வரை தமிழர்கள் யாரையும் வனத்துறையினர் வெளியே விடுவதில்லை. பெரியாறு புலிகள் காப்பக இணை இயக்குநரிடம் கையெழுத்து வாங்கி வந்தால் தான், அனுமதி கிடைக்கும் என்கின்றனர். இதனால், உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை செல்ல முடியாத அவலநிலை உள்ளது' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'ஆனால், கேரளாவைச் சேர்ந்த 2 வனத்துறை வாகனங்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தமிழக எல்லைக்குள் இரவு, பகலாக சுற்றிவருகின்றன' என குற்றம் சாட்டினார்.

தமிழக எல்லைக்குள் அந்த வாகனங்கள் எங்கு செல்கின்றன என்று கேட்டதற்கு,' ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதிக்கு அந்த வாகனம் சென்று வருகிறது. இதற்காக சின்னமனூர், கடமலைக்குண்டு, குமணன் தொழு, மஞ்சனூத்து வழியாக இரவு, பகல் பாராது இந்த வாகனம் செல்கிறது.

நெல்லையில் உள்ள சிவகிரி தாலூகாவில் தலையணை வழியாக செண்பகவல்லி கால்வாய் செல்கிறது. அதை 250 ஆண்டுகள் முன் உடைத்து தான் கேரளாவிற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு கேரளா வனத்துறை பெரியாறு புலிகள் காப்பக கிழக்கு டிவிஷன் செயல்படுகிறது. இதற்குச் செல்ல கம்பம், தேனி, உசிலம்பட்டி, போடி, ஸ்ரீவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர் வழியாக பத்து நாட்களுக்கு ஒரு முறை கேரள வனத்துறையின் மற்றொரு வாகனம், ஆயுத பாதுகாப்போடு செல்கிறது.

இப்படி கேரளா வாகனங்கள் தமிழகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் ஆயுதங்களுடன் செல்ல முடியும். ஆனால், தேக்கடியில் உள்ள நமது பொதுப்பணித்துறை அலுவலக குடியிருப்பை பழுது நீக்க வாகனம் சென்றால் மட்டும் கேரளா வனத்துறை தடுக்கிறது. இது என்ன நியாயம்? கேரளாவிற்கு ஒரு நீதி, நமக்கு ஒரு நீதியா?. எனவே, கேரளாவின் பொதுப்போக்குவரத்தை தவிர அம்மாநில அரசு வாகனங்களை குமுளியில் இன்று காலை 11 மணியளவில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் சிறைபிடித்து போராட்டம் நடத்த உள்ளோம்' என்று கூறினார். இப்போராட்ட அறிவிப்பால் குமுளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x