ஒரு ஏக்கர் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த ரியல் எஸ்டேட் அதிபரை ஈரோடு நில அபகரிப்பு தடுப்பு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள். இவருக்கு சொந்தமான நிலம் ஈரோடு அடுத்த நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு கண்ணம்மாள் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஈரோடு ராஜீவ் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் எஸ்.எம்.மூர்த்தி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் கண்ணம்மாளுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான மற்றொரு ஒரு ஏக்கர் நிலத்தையும் ஆள் மாறாட்டம் மூலம் எஸ்.எம்.மூர்த்தி தனது பெயரில் கிரயம் செய்து உள்ளார். இதை கடந்த 2020ம் ஆண்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் கண்ணம்மாள் வில்லங்க சான்று வாங்கும்போது தெரியவந்தது.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கண்ணம்மாள் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் எஸ்.எம்.மூர்த்தி ஆள் மாறாட்டம் செய்து கண்ணம்மாளுக்கு சொந்தமான நிலத்தை தனது பெயரில் கிரயம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து எஸ்.எம்.மூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.