அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டம் @ மதுரை


மதுரை: மதுரையில் இன்று அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் கூடிய மூன்றாண்டு ஊதியம் வழங்கக்கோரி மூட்டா சார்பில் பல்வேறு கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மூட்டா அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.டி. செந்தாமரை கண்ணன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அதேபோல், எஸ்விஎன் கல்லூரியில் வில்சன், சவுராஷ்ட்ரா
கல்லூரியில் ஞானேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதேபோல், வக்பு வாரியக்கல்லூரி, மதுரைக் கல்லூரி, கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்றது.

இது குறித்து மூட்டா அமைப்பினர் கூறியதாவது: "தமிழக அரசு, பல்கலைக்கழக ஊதியக் குழு பரிந்துரையின்படி கல்லூரி மற்றும் பல்கலைக் கழக ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்திற்கான அரசாணை எண்-5-ஐ (11.01.2021) வெளியிட்டது. அதன்படி தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக் கழகங்கள், அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு நிலுவைத் தொகையோடு ஊதியமும் வழங்கப்பட்டது. ஆனால் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மட்டும் இதுவரை வழங்கவில்லை.

கோயம்புத்தூர், தஞ்சாவூர் மண்டலங்களில் மட்டும் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மீதமுள்ள ஆறு மண்டலங்களில் அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கவில்லை. கடந்த ( 2023 - 24 ) நிதியாண்டில்
உயர் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தில் செலவு போக மீதம் ரூ.200 கோடி அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளதன் மூலம் நிதி பற்றாக்குறை ஒரு காரணமல்ல எனத் தெரிகிறது.

மேலும் நடப்பு நிதியாண்டிலும் தேவையான நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை ஆறு மண்டலங்களில் மட்டும் ஊதியம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்குநர் ஆகியோரை சந்தித்து
பல முறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே நியாயமாக வழங்க வேண்டிய ஊதியம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், என்றனர்.