14 மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பணியிடம் காலி: அரசு உதவிகள் கிடைப்பதில் தாமதம்


கோப்புப் படம்

மதுரை: மாற்றுத் திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க தமிழக அரசு, 1993-ம் ஆண்டு தனி இயக்ககத்தை தொடங்கியது.

அதன் பிறகு, இந்த துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு 60 வகையான நல்த்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமை அதிகாரியாக செயல்படுகிறார். இவர் மூலம், இத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

அந்த அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்றது. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, அவர்கள் தமிழக அரசு மூலம் மருத்துவ உதவி, வங்கிக்கடன், மாத உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் பெற முடியும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

காலியாக உள்ள மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பணியிடத்தை, பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக பார்த்து வருகிறார்கள். அதனால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பணியிடம் காலியாக உள்ள மாவட்டங்களில் உள்ள மாவட்டங்களில், கூடுதல் பொறுப்பு பார்க்கும் அதிகாரி பணியாற்றும் மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் தாமம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் நிர்வாகத்தின் நேரடி பொறுப்பில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் நீண்ட நாளாக முக்கிய பணியிடமான மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்பாதது சர்ச்சையும், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தாமதமாகுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் கூறுகையில், "மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கரூர், பொள்ளாச்சி உள்பட 14 மாவட்டங்களில் கடந்த பல மாதமாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது.

மதுரை மாவட்டத்தை கூடுதல் பொறுப்பாக திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும், கன்னியாகுமரி மாவட்டத்தை கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும், விருதுநகர் மாவட்டத்திற்கு தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரும் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார்கள். இப்படி காலியாக உள்ள மாவட்டங்களை பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார்கள். இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப, கடந்த 14.2.2022ம் ஆண்டு, கீழ்நிலை அதிகாரிகளை அவர்கள் பணி அனுபவம் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக, இத்துறையில் பணியாற்றும் இளநிலை மறுவாழ்வு உதவியாளர், முடக்கியல் அலுவலர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர், பேச்சுதிறன் பயிற்சியாளர், செயல்திறன் உதவியாளர் போன்ற 6 பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். ஆனால், தற்போது இந்த அதிகாரிகளிடையே பதவி உயர்வை பிடிக்க ஏற்பட்டபோட்டியால் ஒவ்வொரும் நீதிமன்றத்தை நாடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவர்களை சமாதானப்படுத்தி, காலிப்பணியிடங்களை நியமிக்க வேண்டிய பொறுப்பு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர், இயக்குனருக்கு உள்ளது. ஆனால், இவர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் செயலர், இயக்குனராக இருப்பவர்கள் வழக்கு தொடுத்தவர்களை பேசி சரமரசம் செய்து வைக்க முடியவில்லை. அதனால், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பணிகள் முடங்குவதோடு அடையாள அட்டை, அரசு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் பெறுவது தாமதமாகிறது," என்றனர்.