ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இடத்துக்கு இ-பட்டா கோரி விசிக உண்ணாவிரதம் @ மதுரை


மதுரை வண்டியூர் தீர்த்தக்காட்டில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றோர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் 1975, 1982-ல் ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கிய இடத்திற்கு இ-பட்டா மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு விசிகவின் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசு முத்துபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் முத்தமிழ் பாண்டியன் முன்னிலை வகித்தார். விசிக முதன்மைச் செயலாளர் பாவரசு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.

இதில் துணைப்பொதுச்செயலாளர் கனியமுதன், முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்வராஜ், தெற்கு மாவட்டச் செயலாளர் ரவி, மண்டலச் செயலாளர் கலைவாணன் உள்பட பலர் பேசினர். முடிவில் இளைஞர் எழுச்சி பாசறை தொகுதி அமைப்பாளர் திருமாறன் நன்றி கூறினார்.

இதுகுறித்து அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் பாவரசு கூறுகையில், ''வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு 1975, 1982-ம் ஆண்டுகளில் 519 பேருக்கு 9 ஏக்கர் 15 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. இதில் 1982-ல் வைகை ஆற்றில் வெள்ளம் வந்து பாதித்தபோது சிலர் இந்த இடத்தை ஆக்கிரமித்து குடியிருந்தனர். அவர்களை 2014-ல் உச்சநீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெற்று அகற்றினோம்.

இந்த நிலையில், 1975-ல் வழங்கிய பழைய பட்டாவை பெற்றுக்கொண்டு இ-பட்டா வழங்குவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் ஆட்சியராக இருந்த அனீஷ்சேகர் இ-பட்டா வழங்கவும் உத்தரவிட்டார். ஆனால், இதுவரையும் இ-பட்டா வழங்கவில்லை. எனவே, இ-பட்டா வழங்கக்கோரியும் மேலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறோம்'' என்றார்.