திருவண்ணாமலை: ‘மலையே மகேசன்’ என போற்றப்படுகிறது “திரு அண்ணாமலை”. ஞானிகள் மற்றும் சித்தர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஆன்மிக பூமி. இம்மலையை வலம் வந்தால் உடல் ஆரோக்கியம் பெற்று வாழ்வில் நன்மை கிடைக்கும் என்பது பல கோடி பக்தர்களின் நம்பிக்கையாகும். உலக பிரசித்தி பெற்ற திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்களும், விடுமுறை மற்றும் இதர நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் வசிக்கும் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, அவர்களிடம் ‘யாசகம்’ பெற்று வாழலாம் என்ற அடிப்படையில் ‘காவி உடை’ அணிந்த போலி சாமியார்கள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாததால், சர்வ சுதந்திரமாகசெயல்படுகின்றனர். மூன்று வேளை உணவு, உடுத்த உடை, இதர செலவுகளுக்கு பணம் ஆகியவற்றை தேடி சென்று பக்தர்கள் வழங்குகின்றனர். யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தின் இருப்பு அதிகரிப்பதால், தவறான வழியில் செலவிடுகின்றனர்.
பீடி, சிகரெட், ஹான்ஸ், பான்பராக் என்ற நிலையில் தொடங்கி, டாஸ்மாக் என்ற நிலையைக் கடந்து, கஞ்சா என்கிற அபாயத்தை தேடிச் செல்வதால், கிரிவலப் பாதையில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளுதல், பக்தர்கள் மீது தாக்குதல், வழிப்பறி என குற்றச்சம்பவங்கள் தொடர்கிறது. மேலும் தலைமறைவு குற்றவாளிகளும் எளிதாக தங்கி விட்டு செல்கின்றனர்.
குற்றச்செயல்களை தடுக்க, கிரிவலப் பாதையில் இருக்கும் சாதுக்களிடம் கைரேகை பதிவு உள்ளிட்ட விவரங்களை காவல் துறையினர் சேகரித்தனர். இப்பணியில் தொடர்ச்சி இல்லாததாலும், தீவிரமான நடவடிக்கை இல்லாததாலும் போலி சாமியார்களின் அடாவடியும் அதிகரித்துள்ளது. கிரிவலப் பாதையை கண்காணிக்க மேற்கு காவல் நிலையம், கிராமிய காவல் நிலையம் இருந்தும் பலனில்லை. இரு சக்கர வாகன ரோந்து பிரிவு காவலர் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
இந்நிலையில், கிரிவலப் பாதையில் உள்ள சூரியலிங்கம் அருகே 2 போலி சாமியார்கள் தாக்கி கொள்ளும் வீடியோ வெளியானது. இவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருவர் தனது கையில் தடியுடன் ஓடிச் சென்று, முன்னே சென்ற ஒருவரை பலமாக தாக்கினார். கற்களை வீசி தாக்கி கொண்டனர். அப்போது அவ்வழியாக கிரிவலம் சென்ற பக்தர்கள், அச்சத்தில் ஒதுங்கிக் கொண்டனர்.போலி சாமியார்களை போன்று இல்லாமல், ஆன்மிக தேடலில் இருப்பவர்கள், சற்று விலகியே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அடியார்கள், பக்தர்கள் கூட்டமைப்பு நிறுவனர் மோகன் சாது கூறும்போது, “கிரிவலப் பாதையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதுக்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஆய்வுக்கு உட்படுத்தி கைரேகை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். இதன்மூலம் போலிசாமியார்களின் நடமாட்டம் தடுக்கப்படும். காவி உடை அணிந்து கஞ்சாவிற்பனை செய்பவர்களை கண்டறிந்து களையெடுக்கலாம். கிரிவலப் பாதையின் புனிதம் காக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களிடம் கைரேகை பதிவு உள்ளிட்ட விவரங்கள் பெறப்படுகிறது. கணக்கெடுப்பு பணி நடைபெறும்போது சாதுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. அடுத்தசில வாரங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவர்களில் போலி சாமியார்களும் அடங்கும். கிரிவலப் பாதையில் காவி உடை அணிந்து நடமாடும் போலி சாமியார்களை களையெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.