சுயபரிசீலனை அவசியம் அண்ணாமலை அவர்களே!


பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு பாஜகவின் திருநெல்வேலி, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தையும் முழுமையாக கலைத்து பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை உத்தரவிட்டார். அத்துடன் இந்த மாவட்டங்களை சீரமைக்க புதிய நிர்வாகிகளையும் அவர் நியமித்துள்ளார். அண்ணாமலையின் இந்த அதிரடி நடவடிக்கை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கானது என்று கட்சி தலைமை மட்டத்தில் பேசப்படுகிறது. இன்னும் பல மாவட்ட தலைவர்களை பதவியில் இருந்து அவர் களையெடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இது பல மாவட்ட பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமன அறிக்கை

பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். 'நடந்து முடிந்த சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தலைவர் அண்ணாமலைக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மாற்றுச்சக்தியாக பாஜகவை மாற்றுவதற்கான செயல்திட்டங்களை அவர் வைத்துள்ளார். இதை நிறைவேற்றுவதற்கான போர் வீரர்களாக மாவட்ட தலைவர்களைப் பார்க்கிறார். இதனால் செயல்படாதவர்களைக் கட்சி பொறுப்புகளில் இருந்து களையெடுத்து வருகிறார். அவர் நடவடிக்கை, எதிர்காலத்தில் வேலை செய்யாத பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை மணியாகவே இருக்கும்' என்று அவர்கள் கூறினர்.

ராம.சேதுபதி

பாஜக தலைவர் அண்ணாமலையால் பதவி பறிபோன புதுக்கோட்டை மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் ராம. சேதுபதியிடம் இதுகுறித்து கேட்டபோது, ' கடைசி வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருந்தது. கடைசியாய் 2 நாட்களுக்கு முன், தனித்து போட்டியிடுகிறோம் என்று தலைமை அறிவித்தது. இதன் காரணமாக உரியமுறையில் வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, 120 பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு பாஜக சார்பில் 110 பேர் வரை விருப்ப மனு கட்டினர். 69 நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 60 பேர் வரை விருப்பமனு தாக்கல் செய்தனர். ஆனால், அப்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த முறை அப்படி காலஅவகாசம் கிடைத்திருந்தால் பாஜக சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அதற்கான அவகாசமும் தரப்படவில்லை. நாங்கள் பதவிக்காக கட்சிக்கு வரவில்லை. தேச சேவைக்காக வந்தோம். வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக தலைவர் அண்ணாமலை எடுத்துள்ள இந்த முடிவை ஏற்று தொடர்ந்து பணியாற்றுவோம்' என்று கூறினார்.

ஆனால், பாஜக உறுப்பினர்களின் கருத்து வேறாக இருக்கிறது. 'கூட்டணியை தீர்மானிப்பது கட்சி தலைமையின் பொறுப்பு. கடைசிவரை பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து விட்டு மாவட்ட தலைவர்கள் மீது வேலை செய்யவில்லை என இப்போது பழிபோடுவது சரியா? இதில் தலைவர் அண்ணாமலைக்கு பொறுப்பு இல்லையா? அனைத்து மாவட்டங்களிலும் 50 சதவீதம் போட்டியிடும் அளவிற்கு பாஜகவிற்கு உண்மையில் செல்வாக்கு உள்ளதா? மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டியிட சீட்டு கிடைக்காத அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாஜக வேட்பாளர்களாக மாறி போட்டியிட்டனர். இது தான் நிதர்சனமான உண்மை. எனவே, பிறர் மீது குற்றம் சுமத்துவதற்கு முன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன் செயல்கள் மீது உரிய பரிசீலனையை மேற்கொள்வதுதான் கட்சி வளர்ச்சிக்கு உதவி செய்யும்' என்று அவர்கள் கூறினர்.

x