“கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா?” - சீமான் ஆவேசம்


சென்னை: கள்ளச் சாராய உயிரிழப்புகள் விவகாரத்தில் அதிகாரிகளை பலிகடாவாக்கிவிட்டு, ஆட்சியாளர்கள் தப்பிக்க முயல்வது பெருங்கொடுமை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் திமுகவினர், காவல் துறை உதவியுடன் அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவுகளுக்கு அதிகாரிகளை மட்டும் பலிகடாவாக்கிவிட்டு ஆட்சியாளர்கள் தப்பிக்க முயல்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருணாபுரத்தில் கள்ளச் சாராயத்தால் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்கு மிக மோசமான சூழல் நிலவும் நிலையில் உயிரிழப்புகளுக்கு கள்ளச் சாராயம் காரணமில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது எப்படி? கள்ளச் சாராய விற்பனையில் திமுகவினரின் ஆதிக்கம் காரணமாகவே காவல் துறையினரால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதும், பொதுமக்கள் அதுகுறித்து புகார் தெரிவிக்கவே அச்சப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து தண்டித்துள்ள திமுக அரசு, அவர்களை நிர்வகிக்கும் முதலமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை அளிக்க உள்ளது?” என்று அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.