சென்னை: தமிழகத்தில் இருந்து நடப்பாண்டில் 5,800 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்த ஆண்டுதமிழகத்தில் முதல் குழுவாக சென்னை மாவட்டத்தில் இருந்து150 பேர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அல் மக்கா ஹஜ் சர்வீஸ், எம்.எஸ்.வேர்ல்டு டிராவல்சர்வீசஸ், முஷமில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகியவை சார்பில் இன்று (மே 18) ஹஜ் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இதையொட்டி ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் பயிற்சி முகாம் மற்றும் பயணிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. அல் மக்கா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் மவுலானா சம்சுதீன் காஸ்மிதலைமை வகித்தார்.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர்அப்துல் சமது, தமிழ்நாடு அரசு வஃக்ப் வாரியத்தின் தலைவர் அப்துர் ரஹ்மான், மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்டோர் பங்கேற்று, ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது கூறியதாவது: 1.75 லட்சம் பேர் பயணம்: இந்தியா முழுவதும் நடப்பாண்டில் 1.75 லட்சம் பேர் புனித ஹஜ்பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றனர். இதில் அரசின் ஹஜ் கமிட்டி சார்பாக 1.40 லட்சம் பேரும்,தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் 35 ஆயிரத்துக்கும் மேற் பட்டோரும் இந்த முறை புனித பயணத்தை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் 5,800 பேர் தங்களது புனித ஹஜ் யாத்திரையை வரும் 26-ம் தேதி முதல் மேற்கொள்ள உள்ளனர்.
அதேபோல தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாக 2,800 பேர் ஹஜ் பயணத்தை தமிழகத்தில் இருந்து மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும். உலகமே சமத்துவத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் ஏங்கக்கூடிய காலகட்டத்தில் உலகளாவிய அளவில் மக்களிடையே எந்தவித வேறுபாடும் இருக்கக் கூடாது என்பதை நடைமுறைப்படுத்தி காட்டுவதற்கான பயணமாக இந்த புனித ஹஜ் பயணம் அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.