உத்தரப்பிரதேசத்தின் ஏழுகட்டத் தேர்தலுக்கானக் கடைசி வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களின் 54 தொகுதிகளில் வாராணசியும் இடம்பெற்றுள்ளது. இவை பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்தவை. இதன் காரணமாக, அவற்றில் பெரும்பாலானத் தொகுதிகளை பாஜக தக்கவைப்பது பிரதமர் மோடியின் கவுரவப் பிரச்சினையானது.
இதற்காக, அதன் தீவிரப் பிரச்சாரத்தில் நேரடியாகக் களம் இறங்கினார் பிரதமர் மோடி. 2014 இல் பிரதமர் வேட்பாளராகப் பாஜக கூட்டணியில் அறிமுகமானது முதல் அவரது அதிரடி நடவடிக்கைகளுக்கு உபியில் பெரும் வரவேற்பு கிடைத்து வந்தது. இதில் துவங்கிய ‘மோடி அலை’ நாட்டின் மற்றப் பல மாநிலங்களிலும் வீசி அவரை பிரதமர் பதவியிலும் அமர்த்தியது. இந்த அலை, 2017 உபி சட்டப்பேரவை மற்றும் 2019 மக்களவையிலும் தொடர்ந்தது. ஆனால், கரோனா பரவல் காலத்தால் இந்த அலை ஓயத் துவங்கியது. இதனால், மீடும் தனது அதிரடி நடவடிக்கைகளை கடைசிகட்டப் பிரச்சாரத்தில் பயன்படுத்தினார் பிரதமர் மோடி.
கடைசி இருதினங்களிலும் வாராணசியில் தங்கியவர், இரவிலும் வெளியில் கிளம்பினார். ரயில்நிலையம் பார்வையிட்டவர், சாலையோரத் தாபாவில் தேநீர் ருசித்தார். வெற்றிலைக்குப் பெயர்போன வாராணசியின் ஒரு கடையில் பீடாவையும் சுவைத்தார். இரவில் கங்கைகரையில் அமர்ந்து புனித நதியை முதன்முறையாக ரசித்தார். இதே பாணியில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள், மறுநாளும் தொடர்ந்தன. இதில், மீண்டும் அவர் ஒரு சாதாரணமான கடையில் அமர்ந்து தேநீரை பருகி, அங்கிருந்த பொதுமக்களை மகிழ்வித்தார். காசி விஸ்வநாதர் கோயிலில் பூஜை செய்தவர் அங்கிருந்து பக்தர்களுடனும் பேச்சு கொடுத்தார். பக்திபரவசத்தில் மூழ்கியிருந்த ஒரு குழுவிடம் உடுக்கையை வாங்கி அடித்தார்.
இந்தவகையில், அவர் வாராணசியின் அறிவுஜீவிகளை தான் தங்கியிருந்த அரசு விடுதிக்கு அழைத்து பேசினார். பிரச்சாரத்தின் முடிவாக அவர், நடத்தியக் கூட்டத்தில் வாராணசியின் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பல பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இதில் தனது குஜராத்தில் செய்த ஆட்சியின் போது நடந்த வளர்ச்சித் திட்டங்களை உபியிடன் இணைத்து பேசினார். இதற்காக, ஒரே கட்சியின் அவசியம் என்பதை, வாக்காளர்களுமான அவர்களிடம் உணர்த்த முயன்றார் பிரதமர் மோடி.
இக்கூட்டத்தில் அறிவுஜீவிகள் இடையே நடந்தபடி பேசிய பிரதமர் மோடி, ‘வாராணசி உள்ளிட்ட உபி மாநிலம், நம் நாட்டின் பல பாரம்பரியங்களையும், கலாச்சாரங்களையும் கொண்டது. இதை மீட்டு வளர்க்க ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாறினால் செய்ய முடியாது. வாராணசியை ஒரு பொருளாதார முகமையாகவும் முன்னிறுத்த உங்கள் ஆதரவு அவசியம். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி, ‘இரட்டை இஞ்சின்’ அரசாக இருப்பதால் பணிகளை வேகப்படுத்த முடியும்.
இதுபோன்ற வாய்ப்பு நான் குஜராத்தில் முதல்வராக இருந்தபோது கிடைத்தது. இதனால் தான் குஜராத் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக வளர்ச்சி பெற்றது. இதுபோல் உபியின் வளர்ச்சிக்கும் பொதுமக்கள் ஆதரவு அவசியம். நான் காசிவாசிகளுக்கு மிகவும் நெருக்கமானவாகி விட்டேன். நீங்கள் கூறமாலே உங்கள் பிரச்சினையை என்னால் உணரமுடியும். காசியின் ஆசியால்தான் நான் நாடு முழுவதிலும் வளர்ச்சித் திட்டங்களை அமலாக்க முடிகிறது.
காசிவிஸ்வநாதர் கோயில் விரிவாக்கப் பணிகளை நான் தேர்தலை மனதில் வைத்து செய்யவில்லை. அப்படி நீங்கள் நினைத்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளேன். இந்த திட்டத்தின் ஒருபகுதி நிறைவடைந்தது குறித்து பொதுமக்கள் கருத்தை கேட்கவே நான் பொதுமக்களை சந்தித்து பேசினேன். நம் நாட்டில் கடந்த 30 வருடங்களாக எந்த அரசும் நிரந்தரமாக இருக்கவில்லை. இதனால், ரயில்துறையிலும் பெரிய வளர்ச்சிகள் செய்ய முடியாமல் இருந்துள்ளது.
உக்ரைனின் கிளம்பியப் பிரச்சினையால் நம் மாணவர்கள் மருத்துவம் பயில வெளிநாடு செல்வது தெரிந்தது. இந்த பிரச்சினையை முன்கூட்டியே நாம் அறிந்ததால் தான் உபியின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்து வருகிறோம். இதனால், போதுமான அளவிற்கு உபியில் மருத்துவக் கல்விக்கான இடங்கள் கிடைத்துள்ளன. இன்னும் அடுத்த 12 வருடங்களில் மேலும் பல எண்ணிக்கையிலான மருத்துவர்கள் கிடைப்பார்கள்’ எனத் தெரிவித்தார்.
வாராணசியின் காசிவிஸ்வநாதர் கோயிலுக்காகப் பல வரலாற்று நூல்களும், தொல்லியல் அறிக்கைகளின் முடிவுகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதை வேகமாகக் கட்டி முடிக்க, 300 பொறியாளர்கள் தலைமையில் சுமார் 2600 கட்டிடப் பணியாளர்கள் பணியாற்றினர். 33 மாதங்களில் தீவிரப் பணியாற்றி காசி விஸ்வநாதர் கோயிலின் 5.25 லட்சம் சதுர மீட்டர் அளவிலானக் ஒருபகுதி பணி முடிந்தது. இதை கடந்த வருடம் டிசம்பரில் பிரதமர் மோடி, ரூ.339 கோடி செலவிலானதை அர்ப்பணித்திருந்தார். மீதம் உள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வேகம் தேர்தலுக்காகக் காட்டப்பட்டது என எழுந்த புகாரை அறிவுஜீவிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி சமாளித்துள்ளார். இதற்காக அவருக்கு கிடைக்கும் பலன் என்ன என்பது மார்ச் 10 வெளியாகும் முடிவுகளில் தெரியும்.